சில மனிதர்கள், சில பாடல்கள்

பட்டினப்பிரவேசம் திரைப்படத்தின் 'வான்நிலா' என்னும் பாடலை கேட்கும் போதெல்லாம் எனக்கு அம்போத்தியின் ஞாபகம்தான் வரும். அம்போத்திக்கு அப்போதே எழுபது வயதுக்கு மேல் இருக்கும். 'நெஞ்சம் மறப்பதில்லை' நம்பியாரை ஞாபகப்படுத்தும் தோற்றத்தில் நரைத்த நீண்ட தாடி மீசை தலைமுடியுடன் சற்று குள்ளமாக இருப்பார். அழுக்கு வேட்டியும், சட்டையும்தான் உடை. நெற்றி நிறைய திருநீறு. நாற்பது வருடங்களுக்கும் மேலாக திருநெல்வேலியில் எடுபிடி வேலைகள் செய்து வாழ்ந்து வந்தவர் என்றே அம்போத்தியைப் பற்றி எல்லோரும் சொல்வர். அம்போத்தி கேரளாவைச் சேர்ந்தவர் என்றும், அம்பலத்து போத்தியே அம்போத்தி ஆனார் என்றும் பல தகவல்கள் அம்போத்தியைச் சுற்றி உலவி வந்தன. இவை எதையுமே அம்போத்தி மறுத்ததுமில்லை. ஆமோதித்ததுமில்லை. எங்கள் வீட்டுக்கு ஹிந்து படிக்க வரும்போதெல்லாம் அம்போத்தி வான்நிலா பாடலை முணுமுணுப்பார். 'நல்லா எளுதிருக்கான் . . . யாரு கண்ணதாசன்தானே . . . மியூசிக் விஸ்வநாதனாத்தான் இருக்கணும் . . நீ கொஞ்சம் அந்த பாட்டை பாடேன்' என்று என்னிடம் சொல்வார். அதற்குப் பின்னும் தெருவில், கோயிலில் எங்கு என்னை பார்த்தாலும் கண்கள் மலர சிரித்து 'வான்நிலா' என்று பாடுவார். தனது இறுதிக் காலத்தில் அம்போத்தி கொஞ்சம் கொஞ்சமாக பார்வை இழந்து வந்தார். கீழரதவீதியில் தள்ளாடி நடந்து சென்று கொண்டிருக்கும் அம்போத்தியைப் பார்த்து சைக்கிளை நிறுத்திவிட்டு பக்கத்தில் போய், 'அம்போத்தி, எங்கே போறீங்க' என்றேன். 'எவம்ல அவன் . . அம்போத்தியாம் அம்போத்தி . எவன் சொன்னான் எம் பேரு அம்போத்தின்னு' என்று கோபமாகச் சொன்னார். மெல்ல அவர் கையைப் பற்றி 'வான்நிலா' என்றேன். உடனே என் கையை அழுத்தமாகப் பிடித்து 'நிலா அல்ல உன் வாலிபம் நிலா' என்று பாடி மகிழ்ந்தார். அன்றுதான் நான் அம்போத்தியை கடைசியாகப் பார்த்தேன்.

தொலைக்காட்சி வசதிகள் வராத காலத்தில் திருநெல்வேலிப் பகுதியில் பெரிய பொழுது போக்குகளில் ஒன்று இலங்கை வானொலி கேட்பது. மயில்வாகனன் சர்வானந்தா, கே.எஸ்.ராஜா, ராஜேஸ்வரி ஷண்முகம், அப்துல் ஹமீது போன்ற பெயர்களைக் கேட்டபடியேதான் நெல்லைவாசிகளின் பொழுது விடியும். படத்தின் பெயரையும், பாடியவர்களின் பெயரையும் அறிவிப்பதோடு விட்டு விடுவதில்லை இந்த அறிவிப்பாளர்கள். சுத்தமான தமிழில் சொக்கவைக்கும் குரலில் பாடலைப் பற்றிய சிறு குறிப்பு ஒன்று கொடுத்து அதன் பிறகே பாடலை ஒலிபரப்புவார்கள். சில சமயங்களில் ஒலிபரப்பப்படும் பாடலை விடவும் இவர்களின் குறிப்பு சுவையாக இருக்கும். இப்போதெல்லாம் எல்லா தொலைக்காட்சிகளிலும் இருபத்திநான்கு மணிநேரமும் பாடல்களை ஒளிபரப்புகிறார்கள். அவர்கள் போடும் பாடலைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த தொகுப்பாளர்களின் தமிழும், நேயர்களுடன் அவர்களின் உரையாடலும் நம்மை கொலை வெறி கொள்ள வைக்கின்றன.

ஹாய் . . யார் பேசுறீங்க . . .

நான் போரூர்ல இருந்து சித்திரைச்செல்வன் பேசறேன் மேடம்

ஆங் சித்ராசெல்வன் . . சொல்லுங்க . . . . சாப்பிட்டாச்சா . . .

சாப்புட்டேன் மேடம் . .நீங்க சாப்பிட்டேங்களா . . .

சாப்பிட்டேன் சித்ராசெல்வன் . . என்ன பண்றீங்க . .

எஸ்.டி.டி. பூத்ல வேலை செய்ரேன் மேடம் . . ஓனர் வெளியெ போயிருக்காரு . . .

என்ன பாட்டு வேணும் . . .சொல்லுங்க . .

காக்க காக்க படத்துலேருந்து ஒன்ரா ரென்டா ஆசைகல் . . .

ஓ . .லவ்லி சாங்க் . . . யாருக்கு டெடிகேட் பன்ன விறும்பரீங்க . .

என் லவ்வர் ப்ரீத்திக்கு கெடிகேட் பன்னுங்க மேடம் . .

கேப்டனுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்றால் எனக்கு ஆங்கிலத்தில் கேட்டாலே வெறுப்பு வருகிற வார்த்தை இந்த Dedicate.

ராஜேஸ்வரி அக்கா அம்மாவை விட பத்து வயது இளையவள். ஆனாலும் தோழி. எங்கள் வீட்டுக்கு எதிரே உள்ள எங்களுக்கு சொந்தமான வீட்டில்தான் குடியிருந்தாள். காதோரம் நீண்டு படர்ந்திருக்கும் தலைமுடியுடன் பார்ப்பதற்கு நடிகை விதுபாலா சாயலில் இருப்பாள். காதில் இரண்டு பெரிய ரிங் போட்டிருப்பாள். ராஜெஸ்வரி அக்கா வீட்டில் டிரான்ஸிஸ்டர் கிடையாது. வானொலி கேட்க எங்கள் வீட்டுக்குத்தான் வருவாள். அவளுக்கு பிடித்தமான பாடல்களில் ஒன்றான 'ஆகாயப் பந்தலிலே' என்னும் பொன்னூஞ்சல் படப் பாடலை அன்று ஒலிபரப்பவில்லை என்றால் ரொம்பவும் வருத்தப் படுவாள். அதைவிடவும் நல்ல பல பாடல்கள் அன்றைக்கு ஒலிபரப்பப்பட்டாலும் அவளுக்கு அதில் மகிழ்ச்சியிருக்காது. ராஜேஸ்வரி அக்கா இல்லாத சமயத்தில் ஆகாயப் பந்தலிலே பாடல் ஒலிபரப்பானால் அம்மா உடனே என்னிடம் டிரான்ஸிஸ்டரை கொடுத்து 'போ . .போயி ராஜேஸ்வரி அக்காட்ட கொண்டு குடு சந்தோஷப்படுவா' என்பாள். நான் உற்சாகமாக ஓடிப்போய் 'அக்கா . .பந்தல் போடுது பந்தல் போடுது' என்பேன். ராஜேஸ்வரி அக்கா முகமெல்லாம் மலர்ந்து என்னையும், டிரான்ஸிஸ்டரையும் வாரியணைத்து பாடலைக் கேட்டு மகிழ்வாள். அக்காவுக்கு திருமணமாகி சென்னைக்குப் போய்விட்டாள். நான் அவளைப் பார்த்து இருபத்தைந்து வருடங்களாயிற்று. தொடர்பே இல்லை. அம்மா இறந்த செய்தி கூட அவளுக்கு தெரியுமோ, என்னவோ. 'ஆகாயப்பந்தலிலே' பாடலை கேட்கும் போதெல்லாம் அம்மாவையும், என்னையும் எப்படியும் நினைப்பாள்தான்.

டேப்ரிக்கார்டர் புழக்கத்தில் இல்லா காலத்தில் மின்சார இணைப்பில் இயங்கும் பெரிய வானொலிப்பெட்டி, பேட்டரியில் இயங்கும் சின்ன டிரான்ஸிஸ்டர் மற்றும் கையடக்க பாக்கெட் டிரான்ஸிஸ்டர் போன்றவைக்கு மவுசு அதிகம். அப்பா புதிதாக வாங்கிக் கொடுத்த பாக்கெட் டிரான்ஸிஸ்டரை கையில் வைத்துக் கொண்டு டியூன் பண்ணியவாறே வாசலில் அமர்ந்திருந்த போது தற்செயலாக குகன் வந்து என்னருகில் அமர்ந்தான். குகனும் கிட்டத்த்தட்ட பாக்கெட் டிரான்ஸிஸ்டர் சைஸில்தான் இருப்பான். ஒரு லாலா கடையில் சரக்கு மாஸ்டராக வேலை பார்த்து வந்த குகன் சற்றே பெண்மை கலந்தவன். நடை, உடை, பாவனையில் ஒரு நளினம். உட்காரும்போதே மணமேடையில் உட்காரும் மணப்பெண் போலத்தான் உட்காருவான். வேலை முடிஞ்சுதா குகா என்று சம்பிரதாயமாகக் கேட்டுவிட்டு டிரான்ஸிஸ்டரையே நோண்டிக் கொண்டிருந்தேன். 'மல்லிகை என் மன்னன் மயங்கும்' பாடல் கேட்டது. அவசர அவசரமாக டிரான்ஸிஸ்டரின் டியூனிங் பட்டனைத் திருப்பினேன். இந்த கோடியிலிருந்து அந்த கோடிவரை போய் பார்த்தும் பாட்டை பிடிக்க முடியவில்லை. 'என்ன தேடுதே' என்றான் குகன். 'இல்ல, மல்லிகை பாட்டு கேட்டுது. எந்த ஸ்டேஷன்னு தெரியல. பாட்டு முடிஞ்சுட்டு போல' என்றேன். களுக்கென்று சிரித்தபடி குகன் 'சரியா போச்சு போ. நான்ல்லா பாடுனேன்' என்றான். உண்மைதான். பெண்குரலில் நன்றாகப் பாடக்கூடியவன் குகன் என்பதே எனக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது. டிரான்ஸிஸ்டரை அமர்த்திவிட்டு ஒருமுறை அந்த பாடலை முழுவதும் குகனைப் பாடச் சொல்லிக் கேட்டேன். இன்றைக்கும் நான் தொலைக்காட்சிகளில் தீர்க்கசுமங்கலி படத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவ்வளவு பெரிய கே.ஆர்.விஜயாவுக்கு பதிலாக சின்னஞ்சிறிய குகனே தலை நிறைய பூ வைத்துக் கொண்டு முத்துராமனின் தோளில் சாய்ந்து 'மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ' என்று பாடுகிறான்.

பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரியும் பெரியண்ணன் தபலா வாசிப்பான். தனது கிளையில் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்காக எங்களையெல்லாம் அழைத்துச் சென்றான். மெல்லிசை கச்சேரி இருக்கிறது என்பதால் உற்சாகமாகவே கிளம்பிப் போனோம். ஓரிரு வாத்தியங்களோடு ஒரு சின்ன ஹாலில் குட்டியாய் ஒரு கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். எங்கள் குடும்ப நண்பரும், அரசாங்கப் பள்ளியாசிரியருமான சொக்கலிங்க மாமாவும் பாடினார். சாதாரணமாக பயந்த சுபாவமுள்ள சொக்கலிங்க மாமா, மேடையேறி விட்டால் எதற்கும் துணிந்து விடுவார். நன்றாக ஹார்மோனியம் வாசிக்கக் கூடிய மாமாவுக்கு பாடுவதில் பேரானந்தம். கேட்பவரின் நிலைமை குறித்த கவலை அவருக்கு கிஞ்சித்தும் கிடையாது. ஓரளவு இசை ஞானமும், ரொம்ப சுமாரான குரலும் கொண்ட சொக்கலிங்க மாமாவின் பாட்டைக் கேட்க நமக்கு தேவை அசாத்திய பொறுமையும், மனத்திடமும் மட்டுமே. மாமா தேர்ந்தெடுக்கும் பாடல்கள் அவரது தைரியத்தை பறை சாற்றும். அன்று மாமா பாடிய பாடல்களில் என்னால் இன்றைக்கும் மறக்க முடியாத பாடல், மதுரை வீரன் படப்பாடலான 'நாடகமெல்லாம் கண்டேன்.' ஜிக்கியின் குரலில் பாடகி கண்ணம்மா பாடினார். நல்ல குரல் வளமும், முறையான இசையறிவும், பயிற்சியும் கைகொடுக்க அருமையாகவே பாடினார் கண்ணம்மா. மாமாவும் பாடினார். நடபைரவி ராகத்தில் இசைமேதை ஜி.ராமனாதனால் மெட்டமைக்கப்பட்ட அந்த பாடலின் மத்தியில் ஒரு இடம். அன்னம் நடைபயில என்று பாடிவிட்டு டி.எம்.சௌந்தர்ராஜன் மேலே இரண்டு படிகள் ஏறிச் சென்று ஒரு சின்ன விளையாட்டு காட்டிவிட்டு மறுபடியும் கீழே இறங்கி வந்து நீந்தி பின் பாடலின் ஆதார மெட்டுக்கு வந்து ஜிக்கியுடன் இணைவார். அன்னம் நடைபயில வரை மாமா சென்றுவிட்டார். அதற்கு மேலும் போக முடியாமல், கீழேயும் இறங்க முயலாமல் அவதிப்பட்டு பின் எந்தவித கூச்சமுமில்லாமல் ஓர் அறிவிப்பை செய்தார். 'இன்றைக்கு என் தொண்டை கொஞ்சம் சரியில்லை. அதனால் பொறுத்தருள்க.' உடனே அடுத்த அடிக்கு போய்விட்டார். அந்தத் தொண்டையால் அவ்வளவுதான் முடியும் என்பது அவரையும் விட அவரை அறிந்த எல்லோருக்கும் நன்றாக தெரிந்த உண்மை. அனுபவித்து கேட்க வேண்டிய அற்புதமான பாடலான நாடகமெல்லாம் கண்டேன் பாடலை சொக்கலிங்க மாமாவின் புண்ணியத்தால் இன்றளவும் சிரித்தபடி கேட்டுத் தொலைக்க வேண்டியுள்ளது.

மார்கழிமாதத்தில் ஒரு நாள் சாலிகிராமத்திலுள்ள சங்கரநாராயணர் கோயிலுக்குச் சென்ற போது ஒரு கர்நாடக சங்கீத கச்சேரிக்கு ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. சோம்பலும், தூரமும் டிஸம்பர் ஸீஸன் கச்சேரிகளுக்கு செல்ல விடாமல் தடுப்பதால் பக்கத்தில் நடக்கும் இதையாவது அனுபவிப்போமே என்று போய் உட்கார்ந்தேன். ஓய்வு பெற்ற அரசு அதிகாரி போன்ற ஒரு பெரியவர் மேடையில் அமர்ந்தார். அரை டிரவுஸர் போட்ட ஒரு சிறுவன் மிருதங்கத்தில் ரவை சேர்த்து சாப்பு கொடுக்கவும் நல்ல நாதம் காதில் விழுந்தது. மனம் உற்சாகமடைந்தது. பாதியிலேயே விட்டுவிட்ட மிருதங்க பயிற்சியை நினைத்து உள்ளுக்குள் குற்றவுணர்ச்சி அதிகரித்தது. பாடகர் பாட ஆரம்பிக்கும் முன் வீட்டிலிருந்து கொண்டு வந்த பாட்டிலிலிருந்து தண்ணீர் குடித்துக் கொண்டார். சீரகத் தண்ணீர் போல தெரிந்தது. உடன் ஒரு வயலின் மற்றும் சுதிப் பெட்டி. சாருகேஸியில் ஆலாபனையைத் தொடங்கினார். ஒன்றும் மோசமில்லை. சுதி விலகவுமில்லை. பத்து நிமிடங்கள் சாருகேஸியில் சஞ்சரித்தார். பிறகு 'வாதாபி கணபதிம்' பாட ஆரம்பித்தார். சிந்துபைரவி திரைப்படத்தில் இளையராஜா காம்போஜியில் உள்ள 'மரிமரி நின்னே' கீர்த்தனையை சாருமதியில் மாற்றிப் போட்டதை எல்லோரும் பெருமையாகச் சொல்கிறார்கள். ஆனால் மேற்படி பாடகர், இளையராஜாவையெல்லாம் தூக்கி சாப்பிடுகிற மாதிரி, ஹம்ஸத்வனியில் பாட வேண்டிய வாதாபி கணபதிம் பஜேயை சர்வ சாதாரணமாக சாருகேஸியில் பாடியதைப் பார்த்து நான் அதிர்ந்து போனேன். அடுத்ததாக 'வாசுதேவயனி' ஆரம்பித்தார். கல்யாணியின் சாயல் கொஞ்சமும் வராமல் பார்த்துக் கொண்டார். அதுவும் சாருகேசியிலேயே பாடினார். நான் மெல்ல எழுந்து வெளியே வந்தேன். மனிதர் அதற்குள் 'மீவல்ல' என்று அடுத்த அஸ்திரத்தை எடுத்து விட்டார். அடக்கி ஒடுக்கி காப்பி ராகத்தையும் சாருகேஸிக்குள்ளேயே வைத்து பாதுகாத்தார். வெறுப்பின் உச்சத்தில் கோயில் நுழைவாயிலின் அருகிலுள்ள அலுவலக அறைக்கு போனேன். அங்கே அமர்ந்த படி கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்த ஒரு பெரியவரிடம் போய் கேட்டேன்.

ஸார், பாடுறது யாருன்னு தெரிஞ்சுக்கலாமா ?

அவர் பேரு சுந்தர்ராஜன். 'சாருகேஸி' சுந்தர்ராஜன்னா எல்லாருக்கும் தெரியும்.

Labels: