புத்தகக் கண்காட்சிக்கு முதல் முறை நானும், நண்பர் மனோவும் சென்றிருந்தோம். இரண்டாவது முறை நான் சென்ற போது திருமதி.ப்ரீத்தம் வெங்கடேஷ் சக்கரவர்த்தி அவர்களை சந்திக்கும் நோக்கத்துடன் என்னுடன் உதவி இயக்குனர் தியாகு வந்தான். அவன் ப்ரீத்தம் இருக்கும் பகுதிக்குச் சென்றுவிட, நான் எனி இந்தியனுக்குச் சென்றேன். உட்கார்ந்து மும்முரமாக வேலையில் மூழ்கியிருந்த தேவராஜன் என்னைக் கண்டதும் துள்ளி எழுந்து கைகுலுக்கி, 'மொதல்ல உக்காருங்க ஸார்' என்று என்னை அமரவைத்தார். 'ரொம்ப சந்தோஷப்படுத்திட்டீங்க ஸார்'. சிரித்துக் கொண்டே இருந்தார். 'எழுத்தும், எண்ணமும்' குழுமத்தில் நான் எழுதியிருந்த குழுமம் ஓர் உரையாடலைப் படித்து விட்டு அன்று காலையிலேயே என்னை தொலைபேசியில் அழைத்து சிரித்திருந்தார். மீண்டும் அதைப் பற்றியே சொல்லிச் சொல்லிச் சிரித்தார். 'ஸார், நான்ல்லாம் சிரிக்கவே மாட்டேன் ஸார். இன்னிக்கு நீங்க எழுதியிருந்ததப் படிச்சுட்டு அப்படி சிரிச்சேன் ஸார். ரொம்ப சந்தோஷமா இருந்துது. என் கவலையெல்லாம் கொஞ்ச நேரத்துக்கு மறந்தே போச்சு. ரொம்ப சந்தோஷம் ஸார்', மீண்டும் சொன்னார். சிறிது நேரத்திலேயே தியாகு வந்துவிட, தேவராஜனிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.
எனி இந்தியனிலிருந்து கிளம்பி செல்லும் வழியில் கவிஞர் சுகுமாரனைப் பார்த்தேன். ஒரு ஸ்டாலில் நின்று கொண்டிருந்தார். சுகுமாரனை ஒரே ஒருமுறை (சென்ற வருடம் மதுரை புத்தகக் கண்காட்சியில்) பார்த்திருக்கிறேன். மற்றபடி அவருக்கும், எனக்கும் மின்னஞ்சல் நட்பு மட்டுமே உண்டு. தொலைபேசியில் கூட பேசியதில்லை. தான் சென்னையில் இருக்கும் விவரத்தை அன்று காலைதான் எனக்கு மின்னஞ்சலில் சொல்லியிருந்தார், சுகுமாரன். சட்டென்று அவரிட்ம போய் பேசுவதற்கு தயக்கமாக இருந்தது. அதுபோக அவர் சுகுமாரன் தானா என்பதிலும் எனக்கு சந்தேகம் இருந்தது. நண்பர் ஹரன் பிரசன்னாவுக்கு ஃபோன் பண்ணினேன்.
பிரசன்னா . . .
யாரு?
யாரா? யோவ், நாந்தான்யா சுகா . . .
அண்ணாச்சி மன்னிச்சுக்குங்க . . . . ஃபோன் தொலைஞ்சு போனதுல நம்பரெல்லாம் போயிட்டு . . .சொல்லுங்க . .
கவிஞர் சுகுமாரன் வந்துருக்காரா?
தெரியலயே . . . வந்துருப்பாராயிருக்கும். ஏன் கேக்கியெ?
இல்ல . . . இங்கெ புதுகைத் தென்றல்ன்னு ஒரு ஸ்டால் முன்னாடி நிக்காரு. அவர்தானான்னு எனக்கு ஒரு டவுட்டு . . .அதான் கேக்கென்.
இவ்வளவுதானெய்யா. கொஞ்சம் இரிங்க. அவரு ·போன் நம்பர் தாரென். பேசி கன்ஃபர்ம் பண்ணிட்டு அப்புறம் போய் பேசுங்க.
சரி. குடுங்க.
ஒரு நிமிஷம். . . . . . . . . . அண்ணாச்சி, அவரு ஃபோன் நம்பரையும் தொலச்சுட்டேன் போலுக்கெ.
வைங்கய்யா ஃபோன.
இன்னொரு முறை எட்டிப் பார்த்தேன். சுகுமாரனுக்கும் நான் அவரை பார்ப்பது தெரிந்து விட்டது. நைசாக என்னைப் பார்க்க ஆரம்பித்தார். நான் தியாகுவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேறு பக்கம் நகர்ந்தேன். 'தியாகு, அந்த ஸார்கிட்டெ போயி அவரு கவிஞர் சுகுமாரனான்னு கேளேன்' என்றேன். தியாகு முன்னோக்கி நகரவும் ஒரு யோசனை. அவனை ஒரு நிமிஷம் நிற்கச் சொல்லிவிட்டு தேவராஜனுக்கு ஃபோன் பண்ணி நான் நிற்கும் இடத்துக்கு வரச் சொன்னேன். தேவராஜனிடம் சுகுமாரனைக் காண்பித்து கேட்கவும், 'சுகுமாரன் ஸார்தான். எனக்கு நல்லா தெரியுமே' என்றார். 'அப்போ நான் போயி பேசலாங்கரீங்களா?' தயக்கத்துடன் நான் கேட்கவும், 'ஸார், உங்களுக்கு யோசனையா இருந்தா நான் வேணா வந்து பேசி உங்களை அறிமுகப்படுத்தட்டுமா?' என்றார். தியாகு எரிச்சலடைந்தான். 'ஸார், இதுக்கு போயி ஏன் ஸார் இவ்வளவு தயங்குறீங்க? வாங்க ஸார், நாமளே போய் பேசலாம்' என்றான். தேவராஜனுக்கு நன்றி சொல்லி அனுப்பிவிட்டு, நானும், தியாகுவும் கவிஞர் சுகுமாரனை நோக்கிச் சென்றோம்.
பதினைந்து இருபது நிமிடங்களுக்கும் மேலாக எங்களின் அலைக்கழிப்பை கவனித்துக் கொண்டிருந்த சுகுமாரன், நாங்கள் அவரை நெருங்கவும் குத்துமதிப்பாக புன்முறுவல் பூத்தபடி எங்களை எதிர்நோக்கினார். நேரே அவரிடம் சென்று நான் கையை நீட்டவும், அவரும் சிரித்தபடி கை பற்றி குலுக்கினார். முகத்தில் மட்டும் குழப்ப ரேகை. நானேதான் பேச ஆரம்பித்தேன்.
'கவிஞர் சுகுமாரன்?'
'நீங்களா?'
'நான் உங்கள கேட்டேன். நீங்க கவிஞர் சுகுமாரன்தானே?'
'இன்னிக்கு மட்டுமே நாலஞ்சு பேரு கேட்டுட்டாங்க. அதுல ரெண்டு பேரு லேடீஸ்'.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. தியாகு என் சட்டையைப் பிடித்து இழுத்தான்.
'ஸார், போயிரலாம்'.
சுகுமாரன் தொடர்ந்தார்.
'பரவாயில்லை. நீங்களே என்கிட்டெ வந்து பேசுனதால ஒங்களுக்கு என்னோட அன்புப் பரிசு.'
ஒரு கவிதைப் புத்தகத்தை எடுத்து கொடுத்தார். அந்த புத்தகத்தின் பெயர் 'இரவின் நரை'. எழுதியவரின் பெயர் 'பிச்சினிக்காடு இளங்கோ' என்று போட்டிருந்தது.
புத்தகத்தை வாங்கிக் கொண்டு பிச்சினிக்காடு இளங்கோவுக்கு நன்றி கலந்த வணக்கத்தை கண்கலங்கச் சொல்லிக் கொண்டு கிளம்பினோம். நேரே கிழக்கு பதிப்பகத்தைத் தேடிச் சென்றேன். தூரத்திலிருந்து பார்க்கும் போதே இரண்டு நாற்காலிகள் போட்டு பிரசன்னா உட்கார்ந்திருப்பது தெரிந்தது. மூச்சிரைக்க சுகுமாரனை சந்தித்த கதையை பிரசன்னாவிடம் சொன்னேன். 'அய்யோ அண்ணாச்சி, என்னால தாங்க முடியலியே. அநியாயத்துக்கு அசிங்கப்பட்டிருக்கியளே' கைகொட்டி உடல் குலுங்கச் சிரித்தார் பிரசன்னா. ஓங்கி ஒரு குத்து குத்த வேண்டும் போலிருந்தது. அவ்வளவு பெரிய பிரதேசத்தில் எந்தப் பகுதியில் குத்துவது என்று தெரியாமல் என் கண்கள் களைத்தன. 'போதும்யா, ரொம்பவும் சிரிக்காதேரும். நான் வாரேன்'. கோபத்துடன் நான் திரும்பி நடக்கும் போது பின்னால் சிரிப்பொலி கேட்டுக் கொண்டுதானிருந்தது.
என்னை வீட்டில் விட்டுவிட்டு தியாகு கிளம்பும் போது அவனிடம் மெல்ல சொல்லிப் பார்த்தேன்.
'நீ வேணா இந்த புஸ்தகத்த கொண்டு போயி படிச்சு பாரேன். நல்ல் . . .லா . .த்தான் இருக்கும்னு நெனைக்கிறேன்'
'இல்ல ஸார். நான் மெடிஸின் சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன். இன்னோரு நாள் வாங்கிக்கிறேன்'.
தியாகு கிளம்பிப் போனான். 'இரவின் நரை' புத்தகத்தின் பின்னட்டையைப் பார்த்தேன். பிச்சினிக்காடு இளங்கோ என்னைப் பார்த்து சிரித்தபடி இருந்தார்.Labels: அனுபவம் (இனிய), புத்தகக் கண்காட்சி