காதல் மன்னன்

மந்திரமூர்த்தியின் வீட்டை டாக்டர்பிள்ளை வீடு என்றுதான் எல்லோரும் அடையாளம் சொல்வர். மந்திரமூர்த்தியின் பூட்டனார், அதாவது தாத்தாவின் தகப்பனார், அந்த காலத்தில் புகழ் பெற்ற டாக்டராக இருந்திருக்கிறார். அவர் கட்டிய வீடு என்பதால் டாக்டர்பிள்ளை வீடு. மந்திரமூர்த்தியின் தகப்பனார், தனது இரண்டு சகோதரர்களுடன் ஒரே குடும்பமாக அந்த பெரிய வீட்டில் வசித்து வந்தார். பள்ளியில் ஒன்றாகப் படித்த நாட்களிலிருந்து இன்றுவரை மந்திரமூர்த்தி என் தோழன். என்னைப் போலவே நல்ல நிறம். ஒடிசலாக, உயரமாக இருப்பான். மனமெங்கும் தாழ்வு மனப்பான்மையும், கூச்ச சுபாவமும் உடையவன். தெருவில் நடந்து செல்லும் போது தூரத்தில் நான்கு பையன்கள் நின்று பேசிக் கொண்டிருந்தாலே வா, வேறு பக்கமாகப் போகலாம் என்று நம்மை இழுத்துச் செல்பவன். ஆனால் காதல் விஷயத்தில் மட்டும் உறுதியானவன்.

முதலில் மந்திரமூர்த்தி காதலித்தது தன்னை விட இரண்டு வயது மூத்தவளான பாத்திமாவை. பாத்திமாவின் அண்ணனும், மந்திரமூர்த்தியின் அண்ணனும் கிளாஸ்மேட்ஸ். அவள் சினிமாவுக்குக் கிளம்பினால் எப்படியாவது தகவல் தெரிந்து கொண்டு எங்களை நச்சரித்து சினிமாவுக்கு இழுத்துச் செல்வான். தினமும் டியூஷனுக்கு போகும் அவளை பத்திரமாகக் கூட்டிச் சென்று பின் வீட்டுக்குக் கொண்டு போய் சேர்த்து வந்தான். ஆனால் தன் கூடவே இவன் வருவது பாத்திமாவுக்கு தெரிந்துவிடாத அளவு இடைவெளியில்தான் நடப்பான். அவளுக்கு திருமணம் ஆகும் வரைக்கும் அது தெரியாமலேயே போனதுதான் சோகம்.

பாத்திமாவின் திருமணத்தை நல்லபடியாக நடத்தி முடித்துவிட்டு மந்திரமூர்த்தி அடுத்து காதலிக்கத் தேர்ந்தெடுத்த பெண் மனோரஞ்சிதம். இவள் மூன்று வயது மூத்தவள். டாக்டர்பிள்ளை வீட்டுக்கு பக்கத்து வீடு. கல்லூரியில் படித்து வந்தாள். இவளை காதலித்ததில் மந்திரமூர்த்திக்கு இருந்த ஒரே சிக்கல் அவள் வேறொருவனை காதலித்து வந்தாள். அதற்காகவெல்லாம் மந்திரமூர்த்தி மனம் தளரவில்லை. எப்படியாவது மனோரஞ்சிதத்தின் காதலனை அடித்து மிரட்டி காதலிலிருந்து துரத்தி விட வேண்டும் என்று அடிக்கடி சொல்லி வந்தான். அழகனும், பலசாலியும், புத்திசாலியுமான மனோரஞ்சிதத்தின் காதலன் கந்தகுமார் பின்வரும் காலங்களில் எங்களுக்கு நண்பனாகிப் போனான். அப்போதெல்லாம் பழைய விஷயங்களைக் கேள்விப்பட்டு , 'எப்பா என்னை அடிச்சுக் கிடிச்சுப் போடாதீங்கப்பா' என்று கலாட்டா செய்வான். அந்த சமயத்தில் மந்திரமூர்த்தி, கந்தகுமார் இருவருமே மனோரஞ்சிதத்தை மறந்து விட்டிருந்தனர். அவளது கணவன் ஒரு முரடன் என்பதே அதற்கு காரணம்.

கல்லூரிக்குச் சென்றபின் மந்திரமூர்த்தி காதலித்தது உமாவை. தினமும் திருநெல்வேலி ஜங்ஷன் பஸ்ஸ்டாண்டில் அவளை பஸ் ஏற்றிவிட்டு அதற்கு பின்பே இவன் கிளம்புவான். எங்களை விட ஒரே ஒரு வயது இளையவனான மீனாட்சி சுந்தரம்தான் மந்திரமூர்த்திக்குத் துணையாக இந்த காதலில் நின்றவன். என்னை சித்தப்பா என்றும், மந்திரமூர்த்தியை மாமா என்றும் அழைக்கும் மீனாட்சியிடம் கேட்டேன்.

எல, ஒங்க மாமன் காதலிக்கிற அந்தப் பொண்ணு நல்லா இருக்குமா?

என்ன இப்படி கேட்டுட்டீய சித்தப்பா . . செலக்கார் ஜானகியைப் பாத்தா எங்க அத்தையப் பாக்க வேண்டாம்.

சௌகார் ஜானகியை மீனாட்சி செலக்கார் ஜானகி என்றே இன்றைக்கும் சொல்வான்.

மந்திரமூர்த்தி காதலிக்கும் எல்லாப் பெண்களையும் போல உமாவுக்கும் மந்திரமூர்த்தியை யாரென்றே தெரியாது. ஆனாலும் மந்திரமூர்த்தி சும்மா இருந்துவிடவில்லை. ஒரு புத்தாண்டு தினத்திற்கு வாழ்த்து அட்டை வாங்கி அந்த பெண்ணிற்கு அனுப்ப முடிவு செய்து விட்டான். இயல்பிலேயே பயங்கரமான தைரியசாலி என்பதால் அந்த வாழ்த்து அட்டையில் கையெழுத்திடுவதற்கு வேறொருவனை தேர்ந்தெடுத்தான். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவன் குஞ்சுவின் தம்பி பாலாஜி. பாலாஜி மிகவும் மகிழ்ச்சியாக நம்மிடம் ஒருவன் கையெழுத்தெல்லாம் கேட்கிறானே என்று என்னமோ ஆட்டொகிரா·ப் போடுவது போல் போட்டு விட்டான். அதற்குப் பிறகுதான் அந்த பெண் உமாவின் தகப்பனார் போலீஸ் துறையில் வேலை பார்க்கிறார் என்னும் விவரத்தை நாங்கள் பாலாஜியிடம் சொன்னோம். விளைவு, மந்திரமூர்த்தியின் தொடர்பை துண்டித்துவிட்டு நிற்காத வயிற்றுப் போக்கின் காரணமாக ஒரு வாரம் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தான் பாலாஜி. அந்த வாழ்த்து அட்டை மந்திரமூர்த்தி தன் மன திருப்திக்காக எழுதி கவ¨ரெல்லாம் ஒட்டியும் தன் பெட்டிக்குள்ளேயே வைத்திருந்த விவரம் பிறகு தெரிய வந்தது. அதற்கு பிறகுதான் பாலாஜியின் உடம்பு இயல்புநிலைக்கு வந்து லேசாகச் சிரிக்க ஆரம்பித்தான்.

மெல்ல மெல்ல மந்திரமூர்த்தி காதலிக்கும் பெண்களின் வயது குறைய ஆரம்பித்தது. அவனது தூரத்து உறவில் மாமன்மகள் முறை வருகிற ஒரு பெண்ணை போனால் போகிறது என்று காதலிக்கத் தொடங்கினான். அந்த பெண் அப்போது ப்ளஸ்டூ படித்து வந்தாள். அந்தப் பெண் உன்னை காதலிக்கிறாள் என்று எப்படி சொல்கிறாய் என்று கேட்டதற்கு, ஒரு முறை அவள் வீட்டுக்கு குடும்பத்துடன் இவன் சென்ற போது அந்தப் பெண் சிரித்தபடியே 'வாங்க' என்றழைத்ததை நினைவு கூர்ந்தான். பிறகு ஒருமுறை பத்திரமாக வைத்திருக்கும் படி ஒரு புகைப்படத்தை என்னிடம் கொடுத்தான். அது அந்த மாமன் மகளின் பூப்புனித நீராட்டுவிழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம். ஆல்பத்திலிருந்து உருவியிருக்கிறான் என்பது அவன் சொல்லாமலேயே தெரிந்தது. கேட்டால் எப்படியும் ஒத்துக் கொள்ளாமல் அவளே கொடுத்ததாகத்தான் சொல்வான் என்பதால் அமைதியாக வாங்கி வைத்துக் கொண்டேன். ரொம்ப நாட்கள் கழித்து அவனிடமே அந்த புகைப்படத்தை நான் திருப்பிக் கொடுத்த போது அதை வாங்கிக் கிழித்து போட்டான். இந்த முறை மந்திரமூர்த்திக்கே திருமணமாகியிருந்தது.

தற்போது ஒரு டால்கம் பவுடர் நிறுவனத்தின் ஏரியா மேனேஜராக இருக்கும் மந்திரமூர்த்தி தமிழ்நாடு முழுவதும் சுற்றி வருகிறான். சென்னையில் வீடுகட்டி மனைவி, மகளுடன் வசிக்கிறான். முன் வழுக்கையும், தொப்பையுமாகப் பார்ப்பதற்கு வேறு ஆளாகிவிட்டான். நீண்ட காலத்துக்குப் பின் நான், நண்பன் குஞ்சு, மந்திரமூர்த்தி மூவரும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தோம். குஞ்சுதான் மெல்ல வாயைக் கிளறினான்.

அப்புறம் மந்திரமூர்த்தி சொல்லு . . வேறென்ன விசேஷம் .. .

ஒண்ணுமில்லேப்பா . . .ஏதோ போயிக்கிட்டிருக்கு . . .

ஏதாவது இருக்குமே . . . நீ காதல் மன்னனாச்சே. . .வந்து விளுவாங்களே உன் மேல . . . . சும்மா சொல்லுல . .பந்தா பண்ணாதே . . .

சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு, பெயருக்கு ஒரு இழுப்பு இழுத்து புகை அனைத்தையும் வெளியே விட்டு சொன்னான்.

இங்கே சென்னை ஆ·பீஸ்க்கு நான் எத்தனை மணிக்கு போவேன்கிறது எனக்கே தெரியாது. ஆனா நான் போற நேரமெல்லாம் கரெக்டா எங்க ஆ·பீஸ் மாடில குடியிருக்கிற பொண்ணு வந்து நிக்கா. இதுக்கு என்ன அர்த்தம்?

நான் குஞ்சுவைப் பார்த்தேன். குஞ்சு வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்.

Labels: ,