சில்வர் டோன்ஸ்

கோயில் விசேஷங்களுக்கும் மெல்லிசைக் கச்சேரிகளுக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. அது நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழாவாக இருந்தாலும் சரி, புட்டாரத்தி அம்மன் கோயில் கொடை விழாவாக இருந்தாலும் சரி. கண்டிப்பாக அந்தந்த கோயிலின் வசதிக்கேற்ப சிறிய, பெரிய மெல்லிசைக் குழுக்களை அமர்த்தி கச்சேரி நடத்துவார்கள். பிட் நோட்டிஸிலிருந்து போஸ்டர்கள் வரை கச்சேரி பற்றிய அறிவிப்பை ஊரெங்கும் காணலாம். 'மக்கா இன்னைக்கு ராத்திரி லாலா சத்திர முக்குல பிரபாகரன் கச்சேரி இருக்கு. சீக்கிரமே போகணும். மறந்துராதே' என்று இளைஞர்கள் காலையிலேயே பேசிக் கொள்வார்கள். வெளியூராட்கள் யாராவது இவர்கள் பேசுவதை கேட்க நேர்ந்தால் இவர்கள் பாடகர்களோ, இசைக் கருவி ஏதேனும் இசைப்பவர்களோ என்று சந்தேகம் வந்து விடும். கச்சேரி கேட்பதற்குத்தான் அவர்கள் இவ்வளவு உற்சாகமாக காலையிலேயே தயாராகிறார்கள் என்கிற விவரம் தெரிய வாய்ப்பில்லை.

பிடரி வரை புரளும் ஹிப்பி முடியும், ஏழுவயதுச் சிறுவன் போய் மறைந்து கொள்ளும் அளவுக்கு பெரிதான பெல்பாட்டம் பேண்டும், கையில் வெள்ளி காப்பும், முகம் பார்க்கும் சிறிய கண்ணாடி சைஸிலுள்ள ஸ்டைலான அகல ஃபிரேம் மூக்குக் கண்ணாடியும் அணிந்த இசைக் கலைஞர்களின் 'சில்வர் டோன்ஸ்' குழுவின் கச்சேரி நான் சின்னப் பையனாக இருக்கும் போது நெல்லைப் பகுதியில் மிகவும் பிரபலம். பாடகர்கள், வாத்தியக் கலைஞர்கள் என்று எத்தனையோ பேர் அந்த குழுவில் இருந்தாலும் அந்த வயதுக்கேயுரிய ரசனையோடு எனக்கு டிரம் வாசிப்பவரின் மீதுதான் காதல். அகலக் காலர் வைத்த சட்டைப் பித்தான்களைத் திறந்து விட்டு கழுத்துச் சங்கிலி தெரிய ஸ்டைலாக குச்சிகளை சுழற்றியபடியே அவர் டிரம் வாசிக்கும் போது டிரம்முடன் சேர்ந்து என் மனமும் அதிரும். கச்சேரி முடியும் வரை அவரை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பேன். தன் வீட்டு மொட்டை மாடியிலிருந்து வெங்கடாசலம் கம்பவுண்டரின் மகளான சிவகாமி அக்காவும் டிரம்மரை மட்டுமே ரசித்து பார்த்துக் கொண்டிருந்ததை ஒரு முறை கவனித்தேன்.

அனேகமாக எல்லா கச்சேரிகளும் இரவு பத்து மணிக்கு மேல்தான் ஆரம்பமாகும் என்றாலும் எட்டு மணியிலிருந்தே கச்சேரிக்கான களை கட்டிவிடும். கச்சேரிக்கு முன்னுள்ள நிகழ்ச்சி பெரும்பாலும் உள்ளூர் சொற்பொழிவாளரின் பிரசங்கமாகத்தான் இருக்கும். நேரம் ஆக ஆக கச்சேரிக்கான ரசிகர்களின் கூட்டம் அதிகமாகி, சாலை நிறைய ஆட்கள் மெல்ல மெல்ல வந்து உட்காரத் துவங்குவர். கடைகளின், வீடுகளின் மாடிகள், அடைத்த கடைகளின் நடைப்படிகளென எங்கும் ஜனத்திரள் குவியும். பிரசங்கி அதிகப்பிரசங்கியாகும் பரிதாபத்தருணமிது. தன் பேச்சுக்காக கூடும் கூட்டமல்ல இது என்னும் உண்மையை அவர் மனம் நம்ப மறுக்கும். பேச்சின் கடைசியில் துருப்புச் சீட்டாக தான் மனப்பாடம் பண்ணி வைத்திருக்கும் ஒரே பட்டினத்தார் பாட்டை சத்தமாக ஒப்பிக்கத் தொடங்குவார். முடிக்கச் சொல்லி தட்டப்படும் கைத்தட்டல்களை பட்டினத்தாருக்கு கிடைத்த பாராட்டாக எண்ணிக் கொள்வார். தொடர்ந்து பேசும் ஆசையில் சோடா குடிக்கும் சொற்ப நேர இடைவெளியில் மூளைக்குள்ளிருந்து ஒவ்வொன்றாக நினைவு படுத்திப் பார்ப்பார். ஆயத்தமாகும் நோக்கோடு கைத் துண்டால் வாயை துடைத்து தொண்டையை செறுமி தொடைகளை அசைத்து சரியாக உட்கார்ந்து மீண்டும் தொடங்க முற்படும் போது விழாக் கமிட்டியாரின் துண்டு சீட்டு போகும். அதை அவர் பொருட்படுத்தாமல் போனால் ஜவுளிக்கடை மகமைச் சங்கத்தின் பொருளாளர் மாரியப்பன் செட்டியார் மேடையேறி,"இத்துணை நேரம் நம்மையெல்லாம் தன் அற்புதமான சொற்பொழிவினால் மகிழ்வித்த . . ." நாவல்டி ரெடிமேட்ஸின் மஞ்சள் சால்வையை போர்த்தி முடித்து வைப்பார். இதற்குள் வாத்தியங்களை ஒவ்வொன்றாக மேடைக்கு ஏற்றத் தொடங்கியிருப்பர்.
ஒன்பது மணிக்கு குழுவினர் வந்து மேடையேறி விட்டாலும் குறைந்தது ஒரு மணி நேரத்துக்காவது அவர்களின் 'ஹலோ ச்செக் ச்செக்' மற்றும் 'டம் டிம் டப் டிப் டங்க் டிங்க்' என்னும் ஆயத்த சத்தங்களை நாம் பொறுமையுடன் கேட்டே தீர வேண்டும். 'எல, இவனுவொ லொட்டு லொட்டுன்னு தட்டிக்கிட்டேதான் இருப்பானுவோ. அதுக்குள்ள வீட்டுக்கு போய் சாப்பிட்டுட்டு வந்துருவொம். அம்மை ஏசிக்கிட்டு உக்காந்திருப்பா. அவளும் கச்சேரிக்கு வரணும்லா' என்று நண்பனிடம் சொல்வான் கடை அடைத்து களைத்து வரும் ஆரெம்கேவி ஊழியன் சொக்கலிங்கம். அதிகம் வெளியே வராத சில சமைந்த பெண்கள், பீடி சுற்றும் சீனியர் பெண்மணிகளின் பாதுகாப்பில் அங்கங்கு கூட்டத்தில் கலந்திருப்பர். இவர்களுக்காகவே சில இளைஞர்கள் சில விடலைப்பையன்களை கூட்டி வருவார்கள். அவ்வப்போது அப்படி அழைத்து வந்த சிறுவனிடம், 'லெச்சுமணா, அந்தா இருக்கா பாரு பத்மா அக்கா. அவ என்ன பாக்காளான்னு பாத்து சொல்லணும் என்னா'. பயல் கச்சேரி சுவாரஸ்யத்தில் பத்மா அக்கா இருக்கும் இடத்தை மறந்து பின் இவன் கேட்கும் போதெல்லாம் குத்துமதிப்பாக பத்மா இருக்கும் திசை பார்த்து 'ஆமா அத்தான். உன்னையேதான் பாக்கா' என்று சொல்லிவிட்டு பாட்டில் கவனம் செலுத்துவான். லெச்சுமணன் பத்மா அக்காவின் சித்தியை பார்த்து சொல்லியிருக்கிற விவரம் தெரியாத இந்த மடையன் ஒரு மாதிரி மயக்கத்தில் இருக்கும் போது, அடுத்த பாடலாக சொல்லி வைத்த மாதிரி, 'ராசாவே உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது' என்று பாடகி பாடுவாள். மிதப்பில் தன்னை மறந்து பனாமா ஃபில்டர் பற்ற வைத்து புகைத்து வளையம் விட்டு கச்சேரி கேட்டுக் கொண்டிருக்கும் தன் பெரியப்பாவிடமோ, மாமாவிடமோ வசமாக மாட்டிக் கொள்வான்.

மெல்லிசை கச்சேரிகளுக்கென்றே சில பாடல்கள் உள்ளன. இதயக்கனியில் உள்ள 'இன்பமே' அதில் ஒன்று. அந்த பாடலின் ஆரம்பத்தில் பல்லவிக்கு முன் வரும் பின்னணி இசையின் புல்லாங்குழல் பகுதியை பெரும்பாலான கச்சேரிகளில் குழலை உதறுவதிலேயே கவனமாக நேரங்கடத்தி அந்த பிட் தன்னை கடந்து சென்ற பின் ஒரு போலி பதற்றத்தை முகத்தில் காட்டுவார் ஃப்ளூட்டிஸ்ட் சிவபெருமாள். அதற்குள் அதை ஆர்மோனியத்தில் வாசித்திருப்பார் தியாகராஜன் மாமா. அது அவருக்கு பழகிப் போனது என்று குழுவில் உள்ள மற்றவர்கள் சொல்வார்கள். இதே போன்று டிரம் வாசிக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு பலகாலம் எங்களை ஏமாற்றிய சங்கரசுப்புவும் 'நினைத்தாலே இனிக்கும்' படப்பாடலான 'நம்ம ஊர் சிங்காரி'யின் முக்கிய டிரம் பிட்டை வாசிப்பதில் இருந்து தப்புவதற்காக குச்சியை சுழற்றி தவற விட்டு பின் அவசர அவசரமாக ஓடி வந்து எடுப்பான். அதற்குள் பாட்டு முடிந்து விடும். அதை பிடிப்பதற்கென்றே குழு உறுப்பினர்கள் ரகசியமாக ஆள் நியமித்தனர். பிறகு அதிலிருந்தும் தப்பிக்க லாவகமாக ஆளில்லாத இடம் பார்த்து குச்சியை வீச ஆரம்பித்து விட்டான்.

பாடகிகள் அழகிகளாக இருப்பது அபூர்வம். அப்படி ஒரு அழகான பாடகியை ஒரு கச்சேரியில் பார்க்க நேர்ந்தது. ஆளைப் போலவே குரலும் கச்சிதம். சரியான ஸ்ருதியில் பாடினாள். ஒவ்வொரு பாட்டுக்கு இடையேயும் அவளையும், அவள் குரலையும் அளவாகப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தான், கச்சேரி நடத்தும் தலைமைப் பாடகன். பணிவுக்குக் காரணம் பாடகியின் தந்தையும் மேடையில் இருந்ததுதான். பேச்சினூடே அவரையும் புகழத் தவறவில்லை. அவரும் ஒரு முன்னாள் பாடகர் என்பது அவன் பேச்சில் தெரிய வந்தது. 'மைக்' மோகனுக்கு கொஞ்சம் வயதான மாதிரி தோற்றத்தில் இருந்தார். மகள் நன்றாக பாடுவதை ரசித்த படியே அமர்ந்திருந்த அவரை பாட வருமாறு அழைத்த போதெல்லாம் மெல்லிய புன்முறுவலுடன் மறுத்த படியே இருந்தார். 'எங்களுக்கெல்லாம் குருநாதர்' என்றெல்லாம் தலைமைப்பாடகன் புகழ்ந்து பார்த்தும் அவர் மசிவதாக இல்லை. கண்ணியமான அவரது தோற்றமே அவர் ஒரு நிறைகுடம் என்பதை உணர்த்தியது. என்னருகில் நின்று கொண்டிருந்த குஞ்சு 'ரொம்பல்லா பந்தா பண்ணுதாரு' என்றான். கச்சேரி முடியும் போது அவர் மகளே அவரை பாட அழைத்த போது அவரால் தட்ட முடியவில்லை. எழுந்து வந்தார். 'வந்துட்டாரு பாத்தியா' என்றேன் குஞ்சுவிடம். எங்கள் இருவருக்கும் பிடித்த பாடலான இளையராஜாவின் 'நான் தேடும் செவ்வந்திப் பூவிது' பாடலை தந்தையும், மகளும் பாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. கொஞ்சம் நகர்ந்து மேடைக்கருகில் சென்றோம். பாடலின் முதலில் வரும் ராஜாவின் ஹிந்தோள ஆலாபனையைத் தொடங்கினார், வயதான மோகன். சற்றும் எதிர்பார்க்காத வேளையில் யாரோ தன் வெற்றுக்காலை பூட்ஸ் காலால் மிதித்த மாதிரியான ஓர் அலறல். விருட்டென கூட்டத்தில் புகுந்து குஞ்சு வெளியே ஒடினான். ஓர் இடைவெளி விட்டு அடுத்த ஆலாபனை. பட்ட காலிலேயே பட்டது இன்னொரு பூட்ஸ் மிதி. இப்போது நான் ஓடினேன்.

அண்ணன் அன்னபூரணன் ஒரு கல்லூரி பேராசிரியர். தபலா வாசிப்பான். அவனது கல்லூரியின் ஆண்டு விழாவிற்காக ஒரு மெல்லிசைக் குழு அமைக்கப் பட்டிருக்கிறது. மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்த அந்த குழுவில் எந்த நேரமும் சண்டை உருவாகும் பதற்ற நிலை. பத்து பாடல்கள் பாடுவதாக திட்டம். கவனமாக இரு பிரிவினருக்கும் தலா ஐந்து என பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டு விழாவன்று கச்சேரி துவங்குவதற்கு சில நிமிடங்கள் இருக்கும் போது மாணவர்கள் தரப்பிலிருந்து கூடுதலாக ஒரு மாணவனுக்கு பாடுவதற்கு வாய்ப்பு கேட்டு வலியுறுத்தியிருக்கிறார்கள். ‘நேரம் இல்லையேப்பா’ என்று சொன்னதை அவர்கள் கேட்க தயாராகயில்லை.

‘விடுங்க ஸார்,பாடிட்டு போறான்...பிறகு அதுக்கு வேற ஸ்டிரைக் பண்ணுவானுவொ..பிரின்ஸி நம்மள புடிச்சு வாட்டுவாரு’

‘ஓகே.ஓகே. . .எப்பா நல்லா பாடுவானா . . மொதல்ல ஆள் யாருன்னு சொல்லுங்கடே . . .’

‘இவன்தான் ஸார் . . . . எல அவன எங்கெ . . . எல ஏய் . . . நாராயணா . . . முன்னால வால . . .’

‘எப்பிடிடே நாராயணா . . .பாடீருவியா . . .?’

‘எங்க ஊர் திருளாம் போதுல்லாம் நான்தான் ஸார் வருசாவருசம் பாடுவேன்.’

நாராயணன் பாடத் துவங்கியிருக்கிறான்.

‘நா . .ஆ . . .ன்

ஒ . .ரு

ரா . . .ஆ .. .ஆ . . . .சியில்லா . . . . .. .

ராஜூ . .ஊ . . . .ஊ . . . ...’

முதல் கல் மாணவர் பகுதியிலிருந்துதான் வந்திருக்கிறது.

Labels: