சுந்தரம் ஐயங்காரின் கருணை

சில நாட்களுக்குமுன் குஞ்சு ஃபோனில் அழைத்தான்.

'எல, இந்தப்பய பைக் ஓட்டுதான்'.

'யாரு கௌரவ்வா?'

'ஆமா. உனக்கு நான் சொல்லியே தீரணும்னுதான் சொல்லுதேன்'.

'சரி சரி. அந்தாக்ல ரொம்பவும் சளம்பாதே. இப்ப என்ன? அவன் பின்னாடியும் உக்காந்து ஒரு ரவுண்டு போயிட்டா போச்சு.'

கௌரவ், எட்டாங் கிளாஸ் படிக்கும் குஞ்சுவின் மகன். எனது மருமகன். அவன் பைக் ஓட்டிய செய்தியை எனக்கு அவசர அவசரமாகச் சொல்லி இந்தப்பயல் குஞ்சு மகிழ்வதற்குக் காரணம், எனக்கு பைக் ஓட்டத் தெரியாது என்பதே.

ஆறாம் வகுப்பு படிக்கும் போது மெல்ல மெல்ல சைக்கிள் ஓட்டப் பழகினேன். அம்மன் சன்னதியில் A.M.சைக்கிள் மார்ட் என்னும் வாடகை சைக்கிள் கடை ஒன்று உண்டு. அங்கு என்னை விட குள்ளமாக ஒரு சைக்கிள் இருந்தது. அதை வாடகைக்கு எடுத்து எங்கள் வீட்டுக்குள்ளேயே ஓட்டிக் கற்றுக் கொண்டேன். அப்போது அம்மன் சன்னதி முழுக்க மாலை நேரங்களில் சைக்கிள்கள் நிறைந்திருக்கும். G.R.ஸாரிடம் டியூஷன் படிக்க வரும் மாணவர்களின் சைக்கிள்கள் அவை. அந்த சைக்கிள்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பாகத்தை இழந்து ஊனமாக நிற்கும். G.R.ஸாரின் மகன் அந்த சைக்கிள்களை எடுத்து தினமும் ஓட்டி கீழே விழுந்து, வரிசையாக அவற்றை உடைத்து வந்தான். ஒரு வருடத்தில் அநேகமாக எல்லா சைக்கிள்களும் தத்தம் அடையாளங்களை இழந்து விதவையாயின. வாத்தியாரின் மகன் என்பதால் ' இந்த செறுக்கியுள்ளைய அப்படியே பொத்தாமரைக் குளத்துல கொண்டு தள்ளீறணும்ல' என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டு வெளியே சொல்ல தைரியமில்லாமல் ' ஒனக்கில்லாத சைக்கிளா, எடுத்துக்கோடே ' என்று ரத்தக் கண்களோடு அந்த மாணவர்கள் சைக்கிள் சாவியைக் கொடுத்துவிட்டு மனதுக்குள் குமுறினர். ஆனால் G.R.ஸாரின் மகனான குஞ்சு எதைப் பற்றியும் கவலைப்படாமல் நித்தம் ஒரு சைக்கிளுடன் வாழ்ந்து வந்தான். நான் சின்ன சைக்கிளிலிருந்து பெரிய சைக்கிளுக்கு வந்து சேர்வதற்குள் அவன் இரண்டு கைகளையும் விட்டு ஓட்ட ஆரம்பித்திருந்தான்.

பெரிய சைக்கிள் ஓட்ட ஆரம்பித்திருந்த புதிதில் தினமும் மாலை வேளையில் நானும், குஞ்சுவும் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஒரு ரவுண்ட் போவதை வழக்கமாக வைத்திருந்தோம். இருவருமே வெள்ளை நிற பேண்ட் துணி எடுத்து தைத்திருந்தோம். அதை அணிந்து கொண்டு சும்மா இருப்பதாவது? ஜங்ஷன் வரை சென்று வரலாம். அதுவும் சைக்கிளில் என்றான் குஞ்சு. (நாங்கள் இருப்பது திருநெல்வேலி டவுணில். ஜங்ஷனில்தான் ரயில்வே ஸ்டேஷன், பஸ்ஸ்டாண்ட் எல்லாம் உள்ளது). நான் முதல் நாளே மனதுக்குள் சைக்கிளில் பலமுறை ஜங்ஷனுக்கு போய் வந்து விட்டேன். குஞ்சு வீட்டுக்கு நான் வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு போக குஞ்சு தயாராக இருந்தான். கல்லணை ஸ்கூல் பெண்கள் வருகிற நேரத்தை கணக்கு பண்ணி நாங்கள் கிளம்பவும் எதிரே வந்த சீதாலட்சுமி, 'என்னல, வெள்ளையும், சொள்ளையுமா கலர் பாக்கக் கெளம்பிட்டேளா?' என்றாள். குஞ்சுவின் வீட்டில் வேலை பார்த்து வந்த சீதாலட்சுமி எங்களை கொஞ்சம் கூட மதிக்க மாட்டாள். அவளை எங்களால் ஒன்றும் செய்யவும் முடியாது. குஞ்சுவின் தாயார் அவளுக்கு அத்தனை சுதந்திரத்தை கொடுத்திருந்தார். சீதாலட்சுமி இப்படி கேட்கவும் கடுப்பான குஞ்சு 'எடுல வண்டியை' என்றான், என்னமோ டாடா சுமோவை எடுக்கச் சொல்கிற மாதிரி. நானும் ஒரு வேகத்தில் சைக்கிளில் ஏறி மிதிக்கத் துவங்க, சீதாலட்சுமியின் மீது இருந்த கோபத்தில் துள்ளி ஏறி பின் சீட்டில் உட்கார்ந்தான் குஞ்சு. அப்போதுதான் நான் டபுள்ஸ் வைக்கப் பழகியிருந்தேன். இந்த மூதேவி உட்கார்ந்த வேகத்தில் வண்டி குடை சாய்ந்தது. ஜனநடமாட்டமுள்ள மாலை நேரத்தில் நடுரோட்டில் சைக்கிளோடு விழுந்தோம். சீதாலட்சுமி கை தட்டி சத்தம் போட்டு சிரித்தாள். 'இவளுக்கு அம்மா ரொம்ப எடம் கொடுக்காங்கலெ' என்றபடியே எழுந்தேன். எப்படியாவது அந்த இடத்திலிருந்து சென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு 'மொதல்ல ஒக்காரு' என்று கோபமாகச் சொல்லி சைக்கிளை ஓட்டத் துவங்கினான் குஞ்சு. குமரகுருபரர் ஸ்கூல் வரை சென்று சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு காலில் பட்டிருந்த அடிக்காகக் கொஞ்சமாக அழுதான். எனக்கு அவ்வளவாக அடியில்லை. வெள்ளை பேண்ட் அழுக்காகி விட்ட கவலை மட்டும் இருந்தது. அந்த சமயத்தில் அதை சொன்னால் குஞ்சு என்னைக் கொன்று விடுவான் என்பதால் சொல்லவில்லை.

ஆறாம் வகுப்பிலிருந்தே நாங்கள் கேட்டுக் கொண்டிருந்த சைக்கிளை பிளஸ்-ஒன் படிக்கும் போதுதான் எங்கள் இருவரது வீட்டிலும் வாங்கிக் கொடுத்தார்கள். அப்போது எங்களுக்கு சைக்கிள் மேலிருந்த காதல் முற்றிலுமாக வடிந்திருந்தது. இருந்தாலும் ஓட்டினோம். எங்களுடன் படித்த நண்பன் பொன்ராஜுக்கு அவனுடைய வீட்டில் சைக்கிள் வாங்கிக் கொடுக்கவில்லை. நான் எனது சைக்கிளை பொன்ராஜிடம் கொடுத்து ஓட்டச் சொல்லிப் பின்னால் உட்கார்ந்து கொள்வேன். பொன்ராஜை வைத்து நான் மட்டுமல்ல. தாராசிங்காலுமே ஓட்ட முடியாது. இரண்டு காரணங்களுக்காக பொன்ராஜ் 'தக்காளி' என்றழைக்கப்பட்டான். ஒன்று, பொன்ராஜின் தளதள உடம்பு. இரண்டு, பொன்ராஜின் அப்பா தச்சநல்லூர் காய்கறி மார்க்கெட்டில் ஹோல்ஸேல் தக்காளி கடை வைத்திருந்தார். பொன்ராஜை சைக்கிளை ஓட்டச் சொல்லி நான் பின்னால் உட்கார்ந்திருப்பதால் என் மீது வெயில் அடித்ததேயில்லை.

சைக்கிளிலிருந்து மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஆசை வந்தது குஞ்சுவுக்கு. அவன் அப்பா ஒரு சுவேகா மொபெட் வைத்திருந்தார். அவருக்கு தெரியாமல் அதை எடுத்து வருவான். நாங்கள் இருவரும் ரவுண்ட் அடிப்போம். சுவேகா கம்பெனிக்காரர்களே தங்கள் தயாரிப்பை மறந்துவிட்ட பின்னரும் குஞ்சுவின் தந்தை அந்த வண்டியை விடாமல் போஷித்து வந்தார். பிறகு மனமே இல்லாமல் அதை கொடுத்துவிட்டு ஒரு சில்வர் பிளஸ் வாங்கினார். அதிலும் நாங்கள் ரவுண்ட் அடித்தோம். பிறகு குஞ்சு பைக் வாங்கினான். அதிலும் நான் பின்னால் அமர்ந்து போனேன். என்னைப் போலவே சைக்கிளோடு திருப்தியடைந்து விட்ட வேறு நண்பர்கள் சிலரும் இருக்கத்தான் செய்தார்கள். அப்படி இருந்த நண்பன் ராமசுப்ரமணியன். ஒரு நாள் மீனாட்சியும், நானும் ராமசுப்ரமணியனுக்காகக் காத்துக் கொண்டு ரோட்டில் நின்று பேசிக் கொண்டிருக்கும் போது, நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் ராமசுப்ரமணியன் ஒரு பைக்கில் சென்றான். கூப்பிடக் கூப்பிட எங்களை மதிக்காமல் வேகமாக எங்களைத் தாண்டிச் சென்றது வண்டி. 'என்னலெ, ஒங்க மாமன் திமிர் புடிச்சு போயி போறான்?' என்றேன் மீனாட்சியிடம். 'ஒண்ணும் கவலப்படாதீங்க சித்தப்பா. அவாள் அந்த முக்குல விளுந்து கெடப்பாக. போய் பாப்போம்' என்றான் மீனாட்சி. பயலுக்கு கருநாக்கு. பால்கடை பக்கத்தில் பாதாளச் சாக்கடைக்குத் தோண்டியிருந்த குழியிலிருந்து பைக்கையும், ராமசுப்ரமணியனையும் வெளியே எடுத்து அப்போதுதான் போட்டிருந்தார்கள். 'எங்களை பாத்துட்டு பெரிய இவரு மாதிரி நிக்காம போனேளே. அப்படி என்ன அவசரம்? இது தேவைதானா மாமா?' என்று கேட்டான் மீனாட்சி. 'தூரப் போலெ. உங்களை பாத்துட்டு நிறுத்தனும்னுதான் நெனச்சேன். எது க்ளெட்ச்சு, எது பிரேக்குன்னு தேடிக் கண்டுபிடிக்கிறதுக்குள்ள இங்கே வந்து விளுந்துட்டேன்' என்றான் ராமசுப்ரமணியன், வலியில் முனகிக் கொண்டே.

குஞ்சு பைக்கிலிருந்து ஜீப்புக்கு போனான். நானும் கூடவே போனேன். இந்த முறை எனக்கு பிரமோஷன். பின் ஸீட்டிலிருந்து முன் சீட்டுக்கு. பிறகு கார் வாங்கினான். ஒரு நாளும் அதை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்று எனக்கு தோன்றியதே இல்லை. அவன் ஓட்ட நான் உட்கார்ந்து போவதிலேயே சுகம் கண்டு கொண்டேன். எங்கள் வீட்டுக் கார்களையும் விட நான் அதிகமாக பயணித்தது குஞ்சுவின் கார்களில்தான். சென்னையில் நண்பர்கள் பலரும் பைக், கார் ஓட்டுகிறார்கள். பார்ப்பதற்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. சுந்தர்ராஜன் மாமா, மனோ,செழியன், திரைப்பட இணை இயக்குனர் பார்த்திபன், உதவி இயக்குனர் பத்மன் மற்றும் என் தம்பி சிவா போன்றோர் என்னை பின்னால் வைத்துக் கொண்டு பைக் ஓட்டுகின்றனர். நண்பர் ஷாஜி என்னிடம் பேசிக் கொண்டே எப்போவாவது சாலையைப் பார்த்து கார் ஓட்டுகிறார். 'என்னைப் போல் ஒருவர்' என்று நான் சந்தோஷமாக நம்பிக் கொண்டிருந்த வ.ஸ்ரீ அவர்களும் கார் ஓட்டி என் நம்பிக்கையில் மண்ணை அள்ளி போடுகிறார். வாழ்க்கையின் பல கட்டங்களில் எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது ஆருயிர் நண்பர் ஜெயமோகன்தான் இந்த விஷயத்தில் எனக்கு ஆறுதலாக இருக்கிறார். சைதன்யாவின் அப்பாவுக்கு சைக்கிளே ஓட்டத் தெரியாது

சென்னைக்கு வந்த பிறகு நானும் மோட்டார் ஸைக்கிள் ஓட்டும் வாய்ப்பு வந்தது. கியர் இல்லாத மொபெட். டி.வி.எஸ்.50. அந்த மொபெட்டுக்கு சாலிகிராமத்தை விட்டால் வேறு ஒரு இடமும் தெரியாது. இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனின் வாலிப வயது மகன் பைக் ஓட்டிக் கொண்டு போய் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அந்தத் துக்க வீட்டுக்குச் சென்றுவிட்டு மனம் உடைந்த நிலையில் நண்பர் சீமான் என்னை தொலைபேசியில் அழைத்து அந்த செய்தியைச் சொல்லி வருந்தினார். 'ஐயாமகனே, வண்டியெல்லாம் பாத்து ஓட்டுங்க. ஒண்ணும் சரியாயில்ல' என்றார். நான் பதிலுக்கு, 'அதெல்லாம் கவலைப்படாதீங்க அராஜகம். நம்ம வண்டி ஏ.வி.எம். ஸ்டூடியோவைத் தாண்டி திருப்பினாலும் போகாது' என்றேன். அந்தச் சூழலிலும் வெடித்துச் சிரித்தார் சீமான்.

கியர் இல்லாத டி.வி.எஸ்.50 முன்பு ஓட்டினேன். இப்போது அவ்வப்போது வீட்டம்மாவின் டி.வி.எஸ். ஸ்கூட்டி பெப் ஓட்டுகிறேன். இதற்கும் கியர் இல்லை. அந்த வகையில் டி.வி.எஸ் அதிபர் சுந்தரம் ஐயங்காருக்கு ரொம்பவும் கடமைப் பட்டிருக்கிறேன். எங்க ஆத்துக் காரரும் கச்சேரிக்கு போகிறாரென்று என்னையும் மோட்டார் வாகனம் ஓட்டுவோரின் பட்டியலில் சேர்த்து என் மானம் காத்தவர் அவரே.

Labels: