ஆடிஅமாவாசை, மற்றும் தாத்தா, ஆச்சியின் திவச நாட்களில் எங்கள் வீட்டிலுள்ள யாரும் சாப்பிடாமல் குருக்களையாத்தாத்தாவின் வருகைக்காகக் காலையிலிருந்தே பசியுடன் காத்துக் கொண்டு இருப்போம். ஆச்சிக்கும், தாத்தாவுக்கும் அப்பா தர்ப்பணம் செய்து காரில் தாமிரபரணியாற்றங்கரைக்குச் சென்று பிண்டம் கரைத்துவிட்டு வீட்டுக்கு வந்த பின்தான் சாப்பிட முடியும். அதுவுமே கூட உடனடியாக சாப்பிட்டு விடமுடியாது. படிப்படியாக அடுத்தடுத்து சம்பிரதாயங்கள் கடைப்பிடித்த பிறகே பந்தி பரிமாறுவார்கள். குடும்ப உறுப்பினர்கள் போக, குருக்களையாத் தாத்தாவையும் சேர்த்து குறைந்தது பத்திலிருந்து இருபது பேராவது பந்தியில் அமர்ந்திருப்போம்.
சுருண்ட ஒற்றை ஜமுக்காளமோ, பந்திப் பாயோ ஆட்களின் எண்ணிக்கைக்கேற்ப விரிக்கப்படும். முதலில் வரிசையாக வாழையிலைகள் போடப்பட, அதன்பின் எவர்சில்வர் தம்ளர்களில் தண்ணீர். குருக்களையாத் தாத்தாவுக்கு மட்டும் பித்தளைச் செம்பு. அடுத்து பரிமாற்றம் தொடங்கும். ஒவ்வொன்றையும் தாத்தா உன்னிப்பாக கவனிப்பார். இலையின் இடது கைமூலையில் உப்பும், சுண்டவத்தலும், வலது கீழ்மூலையில் பருப்பும் பந்தி பரிமாறுதலின் தொடக்கங்கள். இதை சரியாக ஒருவர் பரிமாறிவிட்டால் அவருக்கு பாஸ்மார்க். அடுத்து சுடச்சுட சோறு. அதை இரண்டாகப் பிரித்து இடது பக்கம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். கடைசியில் மோரின்போதுதான் அதை எடுக்க வேண்டும். அப்போது நன்றாக ஆறியிருக்கும். சூடான சோற்றில் மோர் ஊற்றக் கூடாது என்பது அடிப்படை விதி.
இடமிருந்து வலமாக உப்புக்கு அருகில் துவரம், பொரியல், அவியல், கூட்டு, பச்சடி போன்றவை பரிமாறப்படும். நன்றாக கவனித்தால் இலை பெரிதாக, ஆக நீர் அதிகமுள்ள பதார்த்தங்களான அவியல், கூட்டு, பச்சடி வகையறாக்கள் சற்று விஸ்தாரமான இலைப்பரப்பில் இடம்பிடித்திருப்பது தெரிய வரும்.
‘இல்லென்னா சவம் தண்ணிச்சத்து அதிகமுள்ள கறிங்க எலைல ஓடிரும்லா.’
பதார்த்தங்களை மாற்றி யார் வைத்தாலும் சராமாரியான வசவுதான். அதுவும் பெண்களுக்குத்தான் ஏச்சு. திருமணமாகாத பெண்களானால் ‘ இன்னொரு வீட்டுக்கு போகப் போறே. அங்கெ என்னைய மெச்சுவாம்லா, பிள்ள வளத்துருக்காம்பாரு, பருமாறக்கூடத் தெரியாமன்னு’. திருமணமான பெண்களுக்கு சிறப்பு அர்ச்சனை. ‘மாமா, இப்பொ தெரிஞ்சுக்குடுங்க. ஒங்க மக்கமாருக லச்சணத்த. இவளுவொ கூடயும் நாங்க இருவத்தஞ்சு வருசமா குடும்பத்த ஓட்டிட்டோமெய்யா’.
தவறாகப் பரிமாறிவிட்டவர்கள ஆண்களாக இருந்தால், பந்தியில் உட்கார்ந்திருக்கும் பெரியவர்கள் லாவகமாக பரிமாறியவரை தன் இடது கையால் பிடித்து இழுத்து, வலதுகையால் முதுகில் சொத்தென்று மொத்துவார்.
‘செறுக்கியுள்ள, அவியல எங்கெல வைக்க? ஒங்க அம்மைட்ட போயி கேளு. சொல்லுவா’.
அது கல்யாண வீடாக இருந்தாலும் சரி, திவசச் சாப்பாடு பரிமாறும் இடமாக இருந்தாலும் சரி. கண்டிப்பு கண்டிப்புதான்.
தர்ப்பணம் பண்ணுபவர்களின் இலையில் எல்லாப் பதார்த்தங்களுமே பரிமாறப்படும். அதாவது சாம்பார், ரசம், பாயசம், வடை, அப்பளம் உட்பட எல்லாமே. எல்லாம் வந்துவிட்டதா என்று சரிபார்த்தபின் குருக்களையாத் தாத்தா தொண்டையைக் கனைத்துக் கொண்டு ‘திருச்சிற்றம்பலம்’ எனவும் நாங்களும் அதற்காகவேக் காத்திருந்து ‘திருச்சிற்றம்பலம்’ என்போம். பிறகு பதிகம் பாடுவார் தாத்தா.
‘அன்னம் பாலிக்கும் தில்லைச்சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப் பூமிசை
என்னம் பாலிக்குமாறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே’.
குருக்களையாத் தாத்தாவின் பசிக்கு ஏற்ப பதிகத்தின் வேகம் கூடும், குறையும். பிறகு எல்லாப் பதார்த்தங்களிலும் ஒரு பங்கு எடுத்து இலையின் வலதுமூலையில் பச்சடிக்குப் பக்கத்தில் வைத்து நைவேத்தியம் செய்தபின் சாப்பிட ஆரம்பிப்பார்கள். அதற்கு பிறகே மற்றவர்கள் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். இடையில் ரகசியமாக அப்பளத்தை எடுத்து கடிக்க முயன்றாலும் பிடரியில் அடி விழும். ஆண்கள் சாப்பிட ஆரம்பித்த பின் அவர்களின் முகபாவத்தை ரகசியமாக அடுத்த அறையின் கதவோரத்திலிருந்து பெண்கள் கவனிப்பார்கள். அமாவாசை, திவசச் சாப்பாடு போன்றவை விரதச் சாப்பாடு என்பதால் அவர்கள் உப்பு கூட பார்த்திருக்க மாட்டார்கள். எல்லாமே மனக்கணக்கில் போட்டு சமைத்திருப்பார்கள்.
கைகழுவும்போது எப்படியும் ஆண்களிடமிருந்து ஏதாவது குறை சொல்லப்படும்.
‘ஏட்டி வாளைக்கா புட்ட சலிச்சவ சரியா சலிக்க வேண்டாமா? தண்டி தண்டியால்லா இருக்கு?’
வாய் கொப்பளித்துவிட்டு கையைத் துடைத்துவிட்டு அவர் நகரவும், ‘கொற சொல்லலேன்னா ஏளுமட்டம் வாங்கி வாங்கி முளுங்குனது செமிக்காதுல்லா.’ பெண்கள் மத்தியிலிருந்து முணுமுணுப்பு மெல்ல கேட்கும்.
திருநெல்வேலியில் கல்யாணவீடு, சடங்கு காரியங்கள் போன்ற சுப, அசுப விசேஷங்களுக்கு சமையல் செய்பவர்களை தவுசுப்பிள்ளை என்று அழைப்பார்கள். அப்படி எங்கள் குடும்பத்துக்கான தவுசுப்பிள்ளையின் பெயர் விசுப்பிள்ளை. கல்யாணத்துக்கு ஒருவாரத்துக்கு முன்னாலேயே எங்கள் வீட்டு பட்டாசலில் வந்து துண்டை உதறி தொடையில் போட்டுக் கொண்டு தரையில் சட்டமாக சம்மணம் போட்டு உட்காருவார். கணீரென்று சத்தமாகப் பேசி சாமான்கள் லிஸ்ட் போடுவார். வழக்கம் போல பிள்ளையார் சுழி போட்டு மஞ்சள்பொடியிலிருந்து லிஸ்ட் ஆரம்பமாகும். விசேஷவீட்டின் தரம், மற்றும் அழைப்பிதழின் எண்ணிக்கைக்கேற்ப சாமான்களைத் தோராயமாக முடிவு செய்வார் விசுப்பிள்ளை.
‘மறுநா சொதில கை வச்சுராதீரும். மனம் போல செலவளியும், என்னா?’
‘நீங்க சொல்லணுமா. பிள்ளமாரு வீட்டுல சொதிச்சாப்பாடு சரியில்லென்னா தெய்வக்குத்தம்லா?’
சிரித்தபடியே அட்வான்ஸ் வாங்கி வேஷ்டியில் முடிந்து கொண்டு துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு கிளம்புவார்.
திருமணத்துக்கு முதல்நாளே விசுப்பிள்ளையின் பட்டாளம் வந்து இறங்கிவிடும். காய்கறி வெட்டு, தேங்காய்த் துருவல், இலை நறுக்கு என விடிய விடிய வேலை நடக்கும்.
கல்யாணவீட்டுப் பந்தியில் பரிமாறும் வேலையை பெரும்பாலும் கல்யாண வீட்டுக்காரர்களேதான் கவனித்துக் கொள்வார்கள். அதை ஒரு கடைமையாகச் செய்யாமல் உரிமையுடன் இழுத்துப் போட்டுக் கொண்டு ஓடியாடி வேலை செய்வதை மனசும், உடம்பும் நிறைந்து மணமக்களின் பெற்றவர்கள் பார்த்து மகிழ்ந்து கொண்டிருப்பார்கள்.
‘நம்ம கோமு கல்யாணத்துக்கு வேலாயுதம் மாப்ளே அலைஞ்ச அலைச்சல மறக்க முடியுமா? கடைசி பந்திவரைக்கும்லா நின்னு கவனைச்சுக்கிட்டான்!’
உறவினர்கள், நண்பர்கள் சூழ ஒருவருக்கொருவர் கேலி செய்து கொண்டு பரிமாறிக் கொள்ளும் அழகே அழகு.
‘மாமா, இன்னும் கொஞ்சம் சொதி ஊத்துங்க’
‘தாயளி, வீட்ல புளிக்கொளம்புக்கு வளியில்ல. இங்கெ ஒமக்கு சொதி கேக்கு என்னா சொதி. ம்ம்ம்ம் . . . சாப்பிடு.’
கேலி செய்தாலும் சொதியை அள்ளி ஊற்றுவார்.
எந்தக் கல்யாணவீட்டுக்குப் போனாலும் தாலி கட்டியவுடன் மீனாட்சி பரபரப்பாகி விடுவான்.
‘சித்தப்பா, அந்தாக்ல அப்பிடியே இருந்திராதிய. எந்திருச்சு வாங்க. மொத பந்தில உக்காந்திருவொம்’.
‘ஏ மூதி ஏன் இப்பிடி கெடந்து பறக்கெ? ரெண்டு மூணு பந்தி களிச்சுத்தான் சாப்பிடுவோமெ’.
‘வெவரம் இல்லாம பேசாதிய சின்னையா. மூணாம் பந்தில சாம்பார்ல தண்ணிய ஊத்திருவான். கூட்டத்தப் பாத்தா சாம்பார் காணாதுன்னுதான் தோனுது. நான் அப்பதயே நைஸா ஒண்ணுக்கு போற மாதிரி போயி ஆக்குப்பொறைல சாம்பார் கொப்பறைய எட்டி பாத்துட்டெம்லா’.
படுத்தப் படுக்கையாக இருக்கும் வயதானவர்களின் இறுதி நாள் கிட்டத்தட்ட தெரியவரும் போது வீட்டில் உள்ளவர்கள் முதலில் முன்நடவடிக்கையாக ஏற்பாடு செய்வது சாப்பாடு காரியங்களைத்தான்.
‘எப்பிடியும் நாளைக்கு ராத்திரி தாண்டாது கேட்டியா. பெரியவ பாம்பேல இருந்து வரணும். ரெண்டு மூணு நாளைக்குத் தேவையானத வாங்கிப் போடணும். மொதல்ல வெறகுக்கு சொல்லிட்டு வா’.
படுக்கையில் கிடப்பவர் உயிருடன் இருக்கும் போதே அவரை வழியனுப்பும் வேலைகள் தீவிரமாக நடக்கும். பலசரக்கு சாமான்கள், காய்கறிகள் என எல்லாவற்றிற்கும் தயாராகச் சொல்லி வைத்திருப்பார்கள். மரணப் படுக்கையில் இருப்பவரின் தலைமாட்டில் திருவாசகம் படித்துக் கொண்டிருப்பார்கள். எல்லா ஏற்பாடுகளும் சரியாக நடந்து முடிந்த செய்தி வந்தவுடன், மெல்ல ஒருவர் லேசாக விசும்பிக் கொண்டே படுக்கையில் கிடப்பவரின் தலையைப் பிடித்துத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு வெள்ளி தம்ளரில் உள்ள பாலை அவர் வாயில் ஊற்றுவார். வாசலில் புதிதாகப் போடப்பட்ட டியூப்லைட் வெளிச்சத்தில் மாலைமுரசு படித்துக் கொண்டிருப்பவரின் கவனத்தை, வீட்டுக்குள்ளிருந்து வரும் ‘எளா, என்னப் பெத்தா, என்னைய விட்டுட்டு போயிட்டியெ, இனிமெ நான் என்ன செய்வென்’ என்னும் கதறலொலி கலைக்கும்.
அடுத்த சில நிமிடங்களில் ஆக்குப்புறையில் அடுப்பு பற்ற வைக்கப் படும். சுடச்சுட இட்லி அவித்துத் தட்டப்பட, சாம்பார் கொதிக்கும், தேங்காய்ச் சட்னி தயாராகும். விடிய, விடிய காபி கொதித்துக் கொண்டே இருக்கும். துட்டிக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கவனமாகப் பார்த்து கணிப்பவர் தவுசுப்பிள்ளைதான்.
‘ராமையா, கூட ரெண்டு படி அரிசிய போடு. எக்ஸ்ட்ரா எலை சொல்லிட்டெல்லா.’
மரணவீட்டில் அழுது கொண்டு இருக்கும் பெரியவர்களுக்கு மத்தியில் குழந்தைகளின் பசியை முன்பின் தெரியாதவர்கள் கூட போக்குவார்கள்.
‘ஏட்டி, நீ யாரு சங்கரி மகளா? ஒங்க அம்மைய எங்கெ? சரி சரி இங்கெ வா. அளாத. இட்லி திங்கியா. பெரியம்ம தாரென். இந்தா.’
மறுநாள் சாம்பல் கரைத்த பிறகு சுடுகாட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பியவுடன் பந்தி பரிமாறுவார்கள். அன்றைய சாப்பாட்டில் கண்டிப்பாக அகத்திக் கீரை உண்டு. முதல் நாள் சரியாகச் சாப்பிடாமல் பட்டினியாகக் கிடந்த வயிறைச் சரி செய்வதற்காகவே அகத்திக்கீரை. மற்றபடி வழக்கமான விசேஷச் சமையல்தான்.
சமையலின் ருசி மெல்ல மரணத்தின் சோகத்தை மறக்கடிக்கும் தருணமது.
‘மருமகனே, அவியல் நல்லாருக்கு. கூட கொஞ்சம் வாங்கி சாப்பிடுங்க’.
‘நான் நாலு மட்டம் வாங்கிட்டென் மாமா’.
‘சுப்ரமணிப்பய சரியா சாப்புடுதானா? மூதி அவந்தான் கெடந்து அத்த அத்தன்னு கூப்பாடு போட்டு அளுதுக்கிட்டுருந்தான்’.
சுப்ரமணியை எட்டிப் பார்த்தால் அவர் ரசத்தைக் கையில் வாங்கி உறிஞ்சிக் குடித்தபடி, வாளிக்குள் தலையை விட்டுக் கொண்டிருப்பார்.
திருநெல்வேலியில் வருடாவருடம் நான் பார்க்கும் ஒரு வித்தியாசப் பந்தி ‘வைக்கத்தஷ்டமி’ பந்தி. அம்மன்சன்னதித் தெருவில் பிராமணர்களுக்கான பஜனை மடத்தில் கார்த்திகை மாதத்தின் மஹாதேவஅஷ்டமியன்று ஹோமங்கள் வளர்த்து பூஜை முடிந்து பரிமாறுவார்கள். அதற்காக ரசீது புத்தகத்துடன் பணம் வசூலிக்கும் வேலையை புரட்டாசி மாதத்தின் இறுதியிலேயே ஆரம்பித்து விடுவார்கள்.
‘கோபாலன் வைக்கத்தசமிக்கு இந்த வருசமாது ரூவா குடுப்பானால’.
‘அவன் தண்ணில வெண்ணெ கடையிரவம்லா. மயிரயாக் குடுப்பான்’.
திருநெல்வேலி பிராமணர்கள் செந்தமிழில் செப்புவதை இந்த அளவுதான் சொல்ல முடியும்.
‘எல, வைக்கதசமிச் சாப்பாடு சாப்பிட்டா வியாதியே வராதுன்னு சொல்லுதாங்களெ. நெசமாவாலெ?’
குஞ்சுவிடம் கேட்டேன்.
‘அதெல்லாம் ஒரு நம்பிக்கைதான். ஆனா உண்மையிலயே இவங்க அவ்வளவு பேருக்கும் வீட்டுல நெனச்சத சாப்பிட முடியாது, பாத்துக்கொ. மாமி என்ன சமையல் பண்ணி போடுதாளோ அதத்தான் தின்னு தொலைக்கணும், கேட்டியா. அதான் இவங்களா துட்டு பிரிச்சு வருஷத்துக்கு ஒரு மட்டமாது வசமா சாப்பிடுதானுவொ’.
இவ்வளவு வியாக்கியானம் பேசும் குஞ்சு வைக்கத்தஷ்டமியின் போது முதல் பந்தியில் சாப்பிட தன் தகப்பனாருடன் மல்லுக்கு நிற்பான்.
‘எல, நீ அப்பொறம் வா. மொத பந்தி பிராமணாக்குத்தான்’.
‘அப்பொ நான் பாப்பான் இல்லையா. இல்ல இதுதான் பூணூல் இல்லையா’.
பெரிய புரட்சிக்காரன் மாதிரி பூணூலை எடுத்துக் காண்பிப்பான்.
‘கோட்டிக்காரப் பயலெ. ஹோமம் பண்ணுன வாத்தியாருங்கதாம்ல மொதல்ல சாப்பிடணும். நீ வளக்கமா பொம்பளைங்க பந்திக்குதானெ பல்லக் காமிச்சிக்கிட்டு வருவெ. அப்பொறம் இப்பொ என்ன மயித்துக்கு வந்தேங்கென்?’
போட்டு வாங்குவார் குஞ்சுவின் அப்பா.
பெண்கள் பந்தியை நினைத்துக் கொண்டே மகிழ்ந்து சிரித்தபடி பஜனைமடத்திலிருந்து வெளியே வந்து விடுவான் குஞ்சு.
சென்னையில் கேட்டரிங் சர்வீஸ் பரிமாறும் பந்திக்கு இப்போதெல்லாம் மனம் பழகிவிட்டது. கைகளில் பாலிதீன் உறை போட்டு பரிமாறுபவர்கள் கல்யாண வீட்டில் சுடச் சுட முறுகலாக தோசை போட்டு அசத்துகிறார்கள். எழுத்தாளர் வ.ஸ்ரீநிவாசன் அவர்களின் இல்லத் திருமணவீட்டுப் பந்தியில் கேட்டரிங் சர்வீஸ்காரர்கள் ஒரு காகிதக் கோப்பையில் சோன்பப்டி போன்ற ஒரு வஸ்துவை வைத்து விட்டுச் சென்றார்கள். அது என்னவாயிருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அருகில் உட்கார்ந்திருந்த நாஞ்சில் நாடன் சித்தப்பா, ‘மகனே, அது பேரு பேனி. வெளிமாநில சமாச்சாரம். சாப்பிடுங்க. யோசிக்கெண்டாம்’ என்று உற்சாகப்படுத்தினார். சித்தப்பா சொன்ன பெயர் ஒரு கலக்கத்தைக் கொடுத்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேனியை எடுத்து வாயில் போடப் போனேன். எனக்கு இன்னொரு பக்கம் அமர்ந்திருந்த எழுத்தாளரும், திரைப்பட நடிகருமான பாரதி மணி பாட்டையா தடுத்தார்.
‘ஏ, இருடே. அதுல பால் ஊத்திதான் சாப்பிடணும். இப்பொ வரும். அவசரப்படாதெ’.
உண்மைதான். பால் ஊற்றிச் சாப்பிட சுவையாகவே இருந்தது பேனி. வரிசையாக பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. கேட்டரிங் சர்வீஸ்காரர் மோர்மிளகாய் வைத்து விட்டுச் செல்லவும் பாரதிமணி பாட்டையா அவரை அழைத்து, ‘தம்பி, இதவிட கர்ர்ர்ருப்பா இன்னொரு மோர்மொளகா எனக்கு வேணும்’ என்றார்.
தனது நாக்கின் நீளம் நாலுமுழம் என்று அவர் ஒரு கட்டுரையில் எழுதியிருப்பது தன்னடக்கத்தினால் என்பது எனக்கு அன்றைக்குத்தான் தெரிந்தது. நியாயமாக அவரது நாக்கின் நீளம் நாற்பது முழம்.