‘ஒங்களுக்கு சாஸ்தா கோயில் எது?’ பல்வேறு சந்தர்ப்பங்களில், பலதரப்பட்ட மனிதர்களிடமிருந்து இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டபோதெல்லாம் ‘தெரியலீங்களே’ என்று நெளிவேன். திருநெல்வேலி பகுதிகளில் குலதெய்வம் கோயிலை ‘சாஸ்தா’ கோயில் என்றே சொல்வார்கள். பேச்சு வழக்கில் சாத்தாங்கோயில். ‘சொக்கலிங்கம் பிள்ளை மொதலாளிக்கும், எங்க குடும்பத்துக்கும் ஒரே சாத்தாங்கோயில்தான். ஆனா இதச் சொல்லி அவாள்ட்ட போயி ஒறவாட முடியுமா? நாயல்லா அவுத்து விட்டுருவாரு.’ ஒரு ஐந்தாறு வருஷத்துக்கு முன் ஒருமாதிரியாக என் தகப்பனார் மூலம் எங்களின் ‘சாஸ்தா’ யார் என்பது தெரிந்து போனது. ஆனால் எங்கள் தகப்பனார் உட்பட குடும்பத்துப் பெரியவர்கள் பலருக்கும் ‘சாஸ்தா’வைப் பற்றித் தெரிந்தே இருந்திருக்கிறது. தாத்தா காலத்தில் ‘சாஸ்தா’வுடன் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டு, அவர் முகத்தில் முழிக்காமல் இருந்திருக்கிறார்கள். ‘ஒங்க தாத்தாக்கு கோவம் வந்துட்டா காந்திமதியையும், நெல்லையப்பரையும் மாமனாரு, மாமியார ஏசுத மாரில்லா தாறுமாறா ஏசுவா!’ ஆச்சி சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
சென்னையில் ஓர் ஆங்கில் நாளிதழின் நிருபராகப் பணிபுரிகிற ஒரு பெண்மணியைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது, ‘எங்களுக்கு சாஸ்தா கோயில் திருநவேலி பக்கத்துல கங்கைகொண்டான்லதான் ஸார் இருக்கு. வருஷா வருஷம் போவோம்,’ என்றார். அன்றிலிருந்தே எங்கள் சாஸ்தாவைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. பத்து நாட்களுக்கு முன்புதான் அதற்கு வாய்த்தது. தலைமுறை தலைமுறையாக எங்கள் குடும்பம் வணங்கி வந்த குலதெய்வ சாஸ்தாவின் பெயர் ’தென்கரை மகாராஜா’ என்றும், வள்ளியூருக்கு அருகில் உள்ள சித்தூரில் இருக்கிறார் என்பதும் தெரிய வந்தது.
திருநெல்வேலியிலிருந்து காரில் போனால் இரண்டிலிருந்து இரண்டரை மணிநேரம் வரை ஆகும் என்றார்கள். ‘சித்தூர் தென்கர மகராசா கோயிலுக்குத்தானெ? சாட்ரூட்ல ஒருமணிநேரத்துல போயிரலாம். நான் எத்தன மட்டம் போயிருக்கென்.’ சொன்னபடியே ஒருமணிநேரத்தில் சித்தூருக்கு அழைத்துச் சென்றார் டிரைவர் சாகுல் ஹமீது. தென்கரை மஹாராஜா கோயிலுக்கான தேர் ஒரு ஓரமாக அலங்காரமில்லாமல் நின்று கொண்டிருந்த்து. ஆங்காங்கே சின்னச் சின்னக் கோயில்கள். தென்கரை மகாராஜா கோயிலுக்கு முன் பெரிதாக எடுத்துக் கட்டப்பட்டிருந்த ஒரு பெரிய மண்டபம். ‘அருள்மிகு ஸ்ரீ தென்கரை மகாராஜேஸ்வரர் திரு(க்)கோவில் என்று முகப்பு வளையத்தில் எழுதியிருந்தது. தென்கரை மகாராஜாவுக்கு ‘க்’கன்னா ஆகாது என்பது உள்முகப்பிலும் ‘திருகோயில்’ என்று எழுதியிருப்பதைப் பார்த்ததும் உறுதியானது.
தென்கரை மகாராஜாவுக்கு பூஜை செய்யும் பொறுப்பை ஒரு பெரியவரும் அவரது மகன்களுமாக ஒரு பிராமணக் குடும்பம் ஏற்றுக் கொண்டுள்ளது. அர்ச்சக சகோதர்ர்களில் ஒருவரான சேகர், தங்கச் சங்கிலியில் இணைக்கப்பட்ட ருத்திராட்சம் அணிந்திருந்தார். தென்கரை மகாராஜா இருந்த அறையைத் திறந்து எங்களை அவரிடம் கூட்டிப் போனார். பேரமைதி நிலவிய சந்நிதியில், நல்ல துடிப்பாக கண்முழித்து பார்த்துக் கொண்டிருந்தார், மகாராஜா. அந்த இடத்தில் முகம், பெயர் தெரியாத எனது மூதாதையரை நினைத்துக் கொண்டேன். எப்படியும் அவர்களையும் மகாராஜா இப்படித்தான் பார்த்திருப்பார். அர்ச்சனை முடிந்து தீபாராதனை காட்டி முடிந்தவுடன், ‘பேச்சியம்மாளுக்கும் பூச பண்ணனும்லா?’ என்று கேட்டார் சேகர். ரத்தச்சிவப்பில் குங்குமம் அப்பிய முகத்துடன் கோயிலின் பின்புறத்தில் இருந்தாள் பேச்சியம்மாள். அந்த அம்மாளையும் வணங்கி முடித்தோம். மொத்த்த்தில் பத்தே நிமிடங்களில் சாஸ்தா வழிபாடு முடிந்தது. வெளிமண்டபத்தில் சில முதியவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். நல்ல காற்று அடித்துக் கொண்டிருந்த்து. அர்ச்சகர் சேகரின் குழந்தை படுத்துக் கிடந்த கிராமத்து முதியவர் ஒருவர் மேல் சாய்ந்தபடி அமர்ந்து தலைகீழாக வைத்து தினத்தந்தி படித்துக் கொண்டிருந்தாள். சற்றுத் தள்ளி அர்ச்சகரின் சகோதரர்களில் ஒருவராக இருக்கக் கூடும் என்று நாங்கள் யூகித்த ஒரு நபர் கழுத்தில் தங்கச் சங்கிலி மினுமினுக்க உட்கார்ந்திருந்தார். ஆவணி அவிட்டம் முடிந்து சிலநாட்களே ஆகியிருந்ததால் அழுக்கேறாத புத்தம்புதுப் பூணூல் அணிந்திருந்தார். செருப்பை மாட்டும் போது அப்பா கேட்டார்கள். ‘நீங்க சேகரோட அண்ணனா? எழுந்து நின்ற அவர்,
‘ஆமாய்யா,’ என்றார்.
‘பேரு?’
‘சொரிமுத்து,’ என்றார். ஒருவேளை பாபநாசத்திலுள்ள ‘சொரிமுத்து அய்யனார்’ அவருடைய சாஸ்தாவாக இருக்கலாம்.
-o00o-
‘நீங்க சாஸ்தா கோயிலுக்குப் போனதுல்லாம் சரி. அதுக்காக அம்மையையும், அப்பனையும் பாக்காம ஊருக்குப் போயிராதிய. அவாளாது பரவாயில்ல. ஒண்ணும் கண்டுக்கிட மாட்டா. ஆனா அம்மை ரொம்ப வெசனப்படுவா, பாத்துக்கிடுங்க. நான் சொல்லுதத சொல்லிட்டென். அதுக்கு மேல ஒங்க இஷ்டம் சித்தப்பா.’ மீனாட்சி சுந்தரம் வழக்கமாக இப்படித்தான் மிரட்டுவான். அம்மை, அப்பன் என்று அவன் சொன்னது ’அம்மையப்பன்’ காந்திமதியம்மையையும், நெல்லையப்பரையும்.
‘இப்ப என்னலெ செய்யணுங்கெ?’
‘காலைல அஞ்சு மணிக்குல்லாம் வந்திருதென். குளிச்சு ரெடியா இருங்க.’
சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் தெற்குப்புதுத் தெருவிலிருந்து தனது டி.வி.எஸ் 50-யில் மீனாட்சி வரவும், நெல்லையப்பர் கோயிலுக்குக் கிளம்பினோம். பலவருடங்களுக்குப் பிறகு அதிகாலைத் திருநெல்வேலியைப் பார்த்தேன். மீனாட்சியின் கட்டளைப்படி காலில் செருப்பில்லாமல், வேட்டி கட்டிக் கொண்டு, வழக்கம் போல பின்சீட்டில் (வேட்டி கட்டியிருந்ததால்) பெண்கள் போல ஒருசைடாக உட்கார்ந்திருந்தேன். அம்மன் சன்னதி மண்டபத்தைத் தாண்டி, கீழரதவீதிக்குள் நுழையும் போது இரவு போல்தான் இருந்தது.
‘எல, இன்னும் நட தொறக்கலியே?’
‘அதனாலென்ன? வாள்க்கைல நெல்லையப்பர் கோயில் நட தொறக்குறதுக்கு முன்னாலயே நீங்க வந்ததில்லேல்லா? இன்னைக்கு புதுசாத்தான் அனுபவிங்களென்யா.’
பதிலேதும் சொல்லாமல் இருந்தேன். ‘எப்பிடியும் ஏளு ஏளர ஆயிரும். ஒரு டீய குடிச்சிக்கிடுவோம். இல்லென்னா பசி தாங்காது.’ அவ்வளவு பக்தியிலும், பசியைப் பொருட்படுத்தும் மீனாட்சியின் யதார்த்தம்தான், இருபத்தைந்து ஆண்டுகாலமாக எனது நெருக்கமான உறவாக அவனை நினைக்க வைக்கிறது. லாலா சத்திரமுக்கில் ‘சதன்’ டீ ஸ்டாலில் இரண்டு டீ வாங்கினான் மீனாட்சி. ‘பரவாயில்ல அண்ணாச்சி. கண்ணாடி கிளாஸ்லயே குடுங்க.’ என்னிடம் டீ கிளாஸைக் கொடுக்கும் போது, ‘காலேல மொதல் போனி நாமதான். சுத்தமா வெளக்கி வச்சிருக்காரு. இல்லென்னா பேப்பர் கப்தான் வாங்குவென்.’ டீ குடித்து முடித்தவுடன் ஒரு தம்ளர் தண்ணீர் வாங்கி வந்து, ‘சித்தப்பா, ஒரு மடக்கு வாயில் ஊத்தி குடிக்காம அப்பிடியே வச்சுக்கிடுங்க.’ மீனாட்சி எதைச் சொன்னாலும் ஒரு காரணத்துக்காகத்தான் சொல்லுவான் என்பதால், மறுபேச்சு பேசாமல் வாயில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றிக் கொண்டேன். ஆரெம்கேவி பக்கம் வரும் போது வண்டியை ஓரமாக நிறுத்தி, வாயிலுள்ள தண்ணீரைக் கொப்பளித்து விட்டு, என்னையும் அப்படியே செய்யச் சொன்னான். ‘கோயிலுக்குள்ள நிக்கும் போது சவம் வாயில டீ டேஸ்டு சவசவன்னு அப்பிடியே நிக்கும் பாத்தேளா! அதான்.’
காந்திமதியம்மன் சந்நிதியின் வாசலில் பன்னிருதிருமுறை அடியார்கள் உடம்பு முழுக்க திருநீறும், மார்பு முழுக்க ருத்திராட்சங்களுமாக, தத்தம் வேட்டியை அவிழ்த்துக் கட்டிக் கொண்டிருந்தார்கள். இரண்டொரு வயதான ஆச்சிகளும், நடுத்தர வயதுப் பெண்களும் தேவார, திருவாசகப் புத்தகங்கள், சின்னத் தூக்குச்சட்டி, தீப்பெட்டி, பூ, கூடை சகிதம் நடைவாசலில் காத்து நின்றனர். ‘சட்டைய கெளட்டிருங்க சித்தப்பா.’ மீனாட்சியின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்தேன். நடை திறந்து கோயிலுக்குள் நுழையவும், பள்ளிக்கூடம் மணியடித்தவுடன் வெளியே ஓடிவரும் சிறுபிள்ளைகளின் உற்சாகக் குரலுக்கு இணையாக, ‘நம பார்வதி பதயே!’ என்று ஒரு அடியார் சத்தமெழுப்ப, கூட்டத்தோடு கூட்டமாக நானும் மனதுக்குள் ஹரஹர மஹாதேவா’ என்றபடியே உள்ளே நுழைந்தேன்.
திருநெல்வேலியிலேயே பிறந்து வளர்ந்த நான் முதன் முறையாக ‘திருவனந்தல் பூஜை’க்குச் சென்று அம்மையும், அப்பனும் ஐக்கியமாகியிருக்கும் ‘பள்ளியறை’க்கு முன்பு மீனாட்சியைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நின்றேன். பள்ளியறை திறக்கவும் தேவாரம் போலவும், திருவாசகம் போலவும் தெரிந்த ஒரு ரெண்டுங்கெட்டான் பதிகத்தை ‘பன்னிருதிருமுறை அடியார்கள்’ பலத்த குரலில் பாட, ஒவ்வொரு வரியையும் மீனாட்சி உட்பட எல்லோரும் பாடினார்கள். நான் மீனாட்சியின் உதட்டைப் பின்பற்றி கிட்டத்தட்டச் சரியாக வாயசைத்தேன். முடிவில் ‘நம பார்வதி பதயே, ஹரஹர மஹாதேவா, தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ சொல்லும் போது மட்டும் என் குரல் எனக்கேக் கேட்டது.
முதலில் பள்ளியறையிலிருந்து அம்மை தன் சந்நிதிக்குச் சென்றாள். அவளை வணங்கிவிட்டு, சப்பரத்தில் (பல்லக்கு)தன் சந்நிதிக்குக் கிளம்பிய அப்பனுக்குப் பின்னால் செல்லத் துவங்கினோம். இந்த இடத்தில் எனக்கொரு சௌகரியமான சூழலை ‘பன்னிருதிருமுறை அடியார்கள்’ ஏற்படுத்திக் கொடுத்தனர். வேறொன்றுமில்லை. எனக்கு நன்கு தெரிந்த ‘சிவபுராணத்தை’ப் பாடத் துவங்கினர். முதலில் சிவ சம்பிரதாயமாக ‘திருச்சிற்றமபலம்’ என்று துவங்கும் போது, சரி இதற்கும் நாம் வாயசைக்க வேண்டியதுதான் என்று முடிவு செய்துக் காத்திருந்த போது, தலைமை அடியார், ‘நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!’ என்றவுடன் எனக்கு உற்சாகம் பிறந்தது. ஆனால் அடுத்த வரியிலேயே எனக்கு ஒரு சிக்கல் காத்திருந்தது. தலைமை அடியார் பாடிய வரியை வாங்கி அப்படியே திருப்பிச் சத்தமாகப் பாடி சிவனடியார் கூட்டத்தில் இணைந்து, ஒருசிலரைத் திரும்பிப் பார்க்க வைத்து விடலாம் என்கிற எனது நியாயமான ஆசையில் ஒருலாரிமண் விழுந்தது. தலைமை அடியார் ‘நமச்சிவாயம் வாழ்க நாதன்தாள் வாழ்க’ என்று முதல் வரியைப் பாடவும் மற்ற அடியார்கள் அதற்கு அடுத்த வரியான ‘இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க’ என்று பாடினார்கள். மேற்கத்திய இசையின் call and response முறையில், ஒன்றுக்கு பிறகு மூன்று, மூன்றுக்குப் பிறகு ஐந்து என அவர்கள் பாடிய விதம் எனக்கு கைவரவில்லை. ஒவ்வொருவரியாகப் பாடினால்தான் என்னால் முழுமையாகப் பாட முடியும். ஒவ்வொரு வரியிலும் குழம்பி மறுபடியும் மனதுக்குள் முதல் வரியிலிருந்து பாடிப் பார்த்து வந்து சேர்வதற்குள் சிவபுராணம் முடிய இருந்தது. மீனாட்சியைப் பார்த்தேன். அந்த மூதேவி பழக்கம் காரணமாக தங்குதடையில்லாமல் பாடியபடி முன்னே சென்றான். இயலாமையில் கோயில் என்பதை மறந்து மீனாட்சியைக் கெட்ட வார்த்தையில் திட்டினேன். சிவனடியார்களின் பெரும் குரல்களுக்கிடையில் அது அமுங்கிப் போனது. நெல்லையப்பரைச் சுமந்து செல்லும் சப்பரம், நின்றசீர் நெடுமாறன் கலையரங்கைத் தாண்டி யானை கட்டப்பட்டிருக்கும் இடத்தை நெருங்கியது. யானை அங்கு இல்லையென்றாலும் யானையின் வாசனை மூக்கை நிறைத்தது. வாழைக்காய் கமிஷன்கடை நயினார்பிள்ளை தாத்தாவும், நெல்லையப்பர் கோயிலுக்கு அவர் வழங்கிய, அவர் ஜாடையிலேயே உள்ள ‘நயினார்’ யானையும் நின்று கொண்டிருக்கும் நெல்லையின் புகழ் பெற்ற ஓவிய நிறுவனமான ‘ARTOYS’ ஓவியத்தைப் பார்த்தவாறே சிவபுராணத்தின் மிச்சத்தைத் தவற விட்டேன்.
நெல்லையப்பர் சந்நிதியின் கொடிமரத்துக்கு அருகிலுள்ள ‘மாக்காளை’ பக்கம் சப்பரம் வரும் போது, ‘சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்’ என்று சிவபுராணத்தின் கடைசிக்கு முந்தைய வரி வந்தது. சட்டென்று கடைசி வரி நினைவுக்கு வர, சத்தமாக ‘செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து,’ என்றேன். பிறகு வழக்கம் போல் ‘நம பார்வதி பதயே.’
‘மாக்காளைக்கு’ப் பக்கத்தில் யானை ‘காந்திமதி’ நெற்றி நிறைய திருநீற்றுடன் சிரித்தபடி நின்று கொண்டிருந்தது. ‘பன்னிருதிருமுறை அடியார்’ கூட்டத்தில், துவக்கத்திலிருந்தே எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு மனிதர் உரத்த குரலில் ‘சிவபுராணம்’ பாடி வந்து என் கவனத்தைக் கலைத்துக் கொண்டே இருந்தார். சப்பரம் இறங்கி, கஜ பூஜை முடிந்து, கோ பூஜையின் போதுதான், அந்த மனிதரின் முகத்தைப் பார்க்க முடிந்தது. நெற்றியில் அழகாகத் திருமண் இட்டிருந்தார்.Labels: 'சொல்வனம்' இணைய இதழ்