சிவசங்கரன் என்னும் இளைஞன்





ஒருவாரகாலமாகவே பெரியவர் வெங்கட் சாமிநாதன், எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன், ‘பாட்டையா’ பாரதி மணி போன்றோர் என்னிடத்தில் ‘பெரியவர் எப்படி இருக்கிறார்?’ என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். ‘ஐ.சி.யூல இருந்தாலும் உற்சாகமா பேசிக்கிட்டுதான் இருக்காகளாம்’ என்றே பதில் சொல்லி வந்தேன். அதுதான் எனக்கு வந்து கொண்டிருந்த செவிவழிச் செய்தி. ஆனாலும் எந்த நேரமும் மனது அந்தக் கசப்பான செய்திக்காகக் காத்துக் கொண்டுதானிருந்தது.

‘வாத்தியார்’ பாலுமகேந்திரா மறைவை ஒட்டி எனக்கு ஃபோன் செய்த தி.க.சி தாத்தா, ‘பாலுமகேந்திராவப் பத்தி நீருதான்வே எளுதணும். அதான் சரியா இருக்கும்’ என்று சொன்னதுதான் அவருடனான எனது கடைசி உரையாடல். ‘வார்த்தை’ சிற்றிதழில் நான் எழுதத் துவங்கிய காலத்திலிருந்து, (சொல்லப்போனால் ‘பிரசுரமான எனது முதல் கட்டுரையிலிருந்து) தொடர்ந்து நான் எழுதிய அனைத்தையும் படித்து, தி.க.சி தாத்தா எனக்களித்த உற்சாகத்தினால்தான் முழு சோம்பேறியான நான் மூன்று புத்தகங்கள் வரைக்கும் வந்து சேர்ந்திருக்கிறேன்.

திருநவேலியின் பழமை மாறாத சுடலைமாடன் கோயில் தெருவின், பழைய வளவு சேர்ந்த அந்த வீட்டுக்குள் நுழையும் போதே உரத்த குரலில், ‘வாருமய்யா’ என்று பலத்த சிரிப்புடன் வரவேற்று ஒரே நொடியில் அத்தனை சந்தோஷத்தையும் நமக்குக் கடத்தி விடுகிற சிவசங்கரன் என்கிற இளைஞனுக்கு இன்னும் ஐந்து தினங்களில் தொன்னூறாவது பிறந்த நாள்.

‘வே பேரப்பிள்ள! நாலுவரியோ, நாப்பது வரியோ, நீரு என்ன எளுதினாலும் மறக்காம தாத்தாவுக்கு ஒரு காப்பி அனுப்பிச்சுரணும்’ என்கிற தி.க.சி தாத்தாவின் வேண்டுகோளின்படி இதுவரைக்கும் நான் எழுதிய அனைத்தையுமே தாத்தாவுக்கு அனுப்பியிருக்கிறேன். இப்போது எழுதிக்கொண்டிருக்கிற இந்த வரியையும் சேர்த்து அவருக்கு அனுப்பவே மனம் பிரியப்படுகிறது. சாகித்ய அகாதெமி விருது பெற்ற மூத்த இலக்கிய விமர்சகர், ’தாமரை’ இதழின் ஆசிரியர், என் ஆசான்களில் ஒருவரான வண்ணதாசன் அண்ணாச்சியின் தகப்பனார் என்கிற சிறப்புகளையெல்லாம் தாண்டி தி.க.சி அவர்களை ‘தாத்தா’ என்று என் மனதிலிருந்து அழைத்துப் பழகி வந்தேன்.

‘நானும் வருசாவருசம் சொல்லுதேன். உம்மால வர முடியாமப் போயிட்டு. ரெண்டாயிரத்து பதினாலு மார்ச்ல சிவசங்கரன் என்னும் இளைஞனுக்கு தொன்னூறாவது பிறந்தநாள் வருது.அதுக்காவது நீரு வாரதுக்கு முயற்சி பண்ணும்வே, பேரப்பிள்ள! நான் சந்தோஷப்படுவேன்’

சென்ற ஆண்டின் டிசம்பர் மாதத்தில் தி.க.சி தாத்தா சொன்னார்.

திருநவேலியிலிருந்து ஃபோன் பண்ணிய மீனாட்சி ‘ ச்சை . . . இன்னும் ஒரு அஞ்சு நாளு இருந்திருக்கப்படாதாய்யா! அவாள் அவ்வளவு ஆசப்பட்டா!’ என்று உறுதியான குரலில் சொல்லிக் கொண்டே இருந்தவன், ’சின்னப் பையன் செத்துப் போன மாரில்லா இருக்கு! தாங்கவே முடியல, சித்தப்பா’ என்று திடீரென்று உடைந்து அழுதான்.

’அளாதல கோட்டிக்காரப்பயலே! தாத்தா ஒரு கொறையுமில்லாம நல்லா வாள்ந்து அனுபவிச்சுட்டுதான் போயிருக்கா’ என்று சொல்லி சமாதானப்படுத்தி ஃபோனை வைத்து விட்டு, அழுது கொண்டிருக்கிறேன்.

Labels: ,