’சுகா! நான் ஃபேமிலியோட கெளம்பி திருவண்ணாமலைக்குப் போயிக்கிட்டிருக்கேன். நீங்க எப்ப வரீங்க?’
‘கிழக்குச்சீமையிலே’ எழுதிய பேராசிரியர் ரத்னகுமார் ஃபோனில் கேட்டார்.
‘ஸார்! நானும் டாக்டரும் நைட்டு கெளம்பி வந்துடறோம்’ என்றேன்.
‘டாக்டர் வீடியோகேம் கார் ஓட்டுவாரேய்யா! பாத்து பத்திரமா வந்து சேருங்க.
டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸ், சென்னையின் குறிப்பிடத்தக்க குழந்தைநல மருத்துவர். வெளிவர இருக்கும் ‘மேகா’ திரைப்படத்தின் தயாரிப்பாளர். அறிமுகமான மிகக்குறுகிய காலத்தில் அத்தனை நெருக்கமானவர். அதற்கான எக்ஸ்டிரா காரணம், டாக்டருக்கு சொந்த ஊர் திருநவேலி. டாக்டரின் டிரைவிங் பற்றி பேராசிரியர் சொன்னது உண்மைதான். கடந்த மாதத்தின் ஓர் இரவில் சென்னையிலிருந்து டாக்டரின் இன்னோவா காரில் பேராசிரியர், நான், சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த தோழர் பாலாஜி, சீத்தாராமன் போன்றோர் பண்ணைப்புரத்துக்குப் பயணமானோம். டாக்டர் ஆல்பர்ட்தான் கார் ஓட்டினார். அவரது இருக்கைக்கு அருகில் நான். கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரே வரும் லாரியை நோக்கி உதடு குவித்து, நொடிப்பொழுதில் ஏமாற்றி, ஸ்டியரிங்கை வளைத்து ’ழ’ என்று ரோட்டில் கார் டயர்களினால் எழுதிக் காண்பித்து, காரில் இருந்த அனைவரின் மலச்சிக்கலையும் மருந்து கொடுக்காமல் குணமாக்கினார், டாக்டர். இடையிடையே வரும் ஃபோன் கால்களையும் அட்டெண்ட் செய்து பேசினார்.
‘சொல்லுங்கம்மா. . .
கொளந்தைக்கு என்ன வயசாகுது? . . .
சரிசரி . . . ஒண்ணும் பயப்பட வேண்டாம் . . . ப்ரிஸ்க்ரிப்ஷன்ல ரெண்டாவதா எளுதியிருக்கிற மருந்துல அஞ்சு எம்.எல் குடுங்க . .
முன் அனுபவம் காரணமாகவே பேராசிரியர் தனியாகக் கிளம்பி திருவண்ணாமலைக்குச் சென்றார்.
திருவண்ணாமலையில் இளையராஜா அவர்களின் நூல்கள் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே நாங்கள் சென்று கொண்டிருந்தோம். இந்தமுறையும் டாக்டருடன் நான் முன் இருக்கையில் அமர்ந்துகொள்ள, பின் சீட்டில் பெல்ட்டை உடம்பு முழுக்க இறுக்கிப் போட்டு, அண்ணாமலையாரை வேண்டியபடி, அமர்ந்திருந்த பத்திரிக்கையாளர் தம்பி தேனி கண்ணனின் உதடுகள் அரைகுறையாக கந்தரலங்காரத்தை முணுமுணுத்துக்கொண்டிருந்தன. காதில் விழுந்த வார்த்தைகளை கவனித்துக்கேட்டபோது, அது தேனி கண்ணனே எழுதியவை என்பது புரிய வந்தது. டாக்டருடன் பயணிக்கும் போது இளையராஜாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை பென்டிரைவில் நான் கொண்டு செல்வதால், ரோட்டை கவனிக்காமல் இசைக்குள் சென்று விடுவேன்.
நள்ளிரவில் நாங்கள் திருவண்ணாமலைக்குள் நுழைந்த போது மழை கொட்டிக் கொண்டிருந்தது. காலையில் ரமணாசிரமத்துக்குச் சென்று இளையராஜா ஸாரைப் பார்த்துவிட்டு, நிகழ்ச்சிக்கு செல்வதாகத் திட்டம். ஏதேதோ பேசிவிட்டுத் தூங்கும்போது விடிந்திருந்தது.
‘இன்னும் ரெடியாகலயாய்யா?’
இளையராஜா ஸார் ஃபோனில் சத்தம் போடவும், அவசர அவசரமாக எழுந்து, பல் தேய்த்து, குளித்து ரமணாசிரமத்துக்குக் கிளம்பிச் சென்றோம்.
‘ம்ம்ம். ஆசிரமத்தை சுத்திட்டு, கோயிலுக்குப் போங்க. 11 மணிக்கு நிகழ்ச்சி. நான் வந்துடறேன்’.
கோயிலுக்குள் நுழைந்து நிகழ்ச்சி நடைபெறும் ஆயிரங்கால் மண்டபம் அருகே சென்றபோது, நெளிந்த குரலில் யாரோ ’சொல்லடி அபிராமி’ என்று பாடிக் கொண்டிருந்தார். அவர் பாடி முடிக்கவும், அவர்தான் டி.எம்.சௌந்தர்ராஜனின் பேரன் என்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். பேராசிரியர் ரத்னகுமார் குடும்பத்தினருடன், நானும், டாக்டர் ஆல்பர்ட்டும் பார்வையாளர்களுடன் சென்று அமர்ந்து கொள்ள, சில நிமிடங்களில் இளையராஜா அவர்கள் மேடைக்கு அழைத்து வரப்பட்டார். உடன் கவிஞர்கள் முத்துலிங்கம், மு.மேத்தா, சொற்கோ, இளையகம்பன், கோ.சாரங்கபாணி மற்றும் தோழர் ஸ்டாலின் குணசேகரன் போன்றோரும் மேடையேறினர். அதற்கு முன்னால் ஸ்டாலின் குணசேகரனிடம் தேனி கண்ணன் என்னை, ‘இவர்தான் சுகா’ என்று அறிமுகப்படுத்தவும், ‘பேர் மட்டும் சொன்னா போதும். மத்தபடி இவரப் பத்தி எல்லாம் தெரியும்’ என்றபடி மகிழ்ச்சியுடன் கைகுலுக்கினார், தோழர் ஸ்டாலின் குணசேகரன்.
இளையராஜா அவர்கள் எழுதிய நூல்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒவ்வொருவர் பேசுவதாக நிகழ்ச்சியின் அழைப்பிதழ் சொல்லியது. விழா துவங்கும் முன் முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி மற்றும் அவரது சகோதரரும், கல்வியாளரும், ரசனையான எழுத்தாளருமான எஸ்.கே.பி.கருணாவும் இளையராஜா அவர்களுக்கு மாலையணிவித்து ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டுக் கிளம்பிச் சென்றனர். நண்பர் எஸ்.கே.பி.கருணா உணர்ச்சிமயமாக, அதேசமயம் உண்மையாகப் பேசினார். சுருக்கமாகப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. பேசி முடித்ததும் இளையராஜா அவர்களுடன் தற்போதைய ஃபேஷனான ‘செல்ஃபி ஃபோட்டோ’ ஒன்றை எடுத்துக் கொண்டார்.
எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாமல், முழுக்க முழுக்க ராஜா ஸார் அழைத்தாரே என்கிற ஒரே காரணத்துக்காக அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்த எனக்கு கவிஞர் முத்துலிங்கத்தின் துவக்கவுரை அத்தனை சுவாரஸ்யமாக அமைந்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அத்தனை எளிமையான தமிழில் சுவையாக அமைந்தது கவிஞரின் பேச்சு. அடுத்து வந்த இளையகம்பன், இளையராஜா அவர்களை வர்ணித்து கவியரங்கத்தில் வாசிக்கப்படும் கவிதைகளைப் பாடி அமர்ந்தார். அடுத்து வடநாட்டு உடையில் பளபளப்பாக வந்த சொற்கோ உரத்த குரலில் இளையராஜா அவர்களின் வெண்பா குறித்து பேசிக் கொண்டிருந்தபோது மேடையேறினார் தமிழக அமைச்சர் மாண்புமிகு அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள். உடன் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி வனரோஜா மற்றும் கழகத்தைச் சார்ந்த அணுக்கத் தொண்டர்கள். நனைந்த ஜிப்பாவுடன் கவிஞர் சொற்கோ உட்கார வைக்கப்பட்டார். அமைச்சர் பெருமகனார் கையில் டைப் செய்யப்பட்ட சில காகிதங்களுடன் பேச வந்தார். தமிழ் இலக்கியம் என்றால் என்ன? திருவள்ளுவர் என்பவர் யார்? தமிழ் மொழியின் மகத்துவம் என்ன? என்கிற கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் அளிக்கும் வண்ணம் சுவைபட, டைப் செய்யப்பட்ட அந்தப் பக்கங்களை வாசித்தார். ஐந்தாறு பக்கங்களை அவர் வாசித்து முடிக்கும்போது, மேலும் சில டைப் பக்கங்களை அவரது உதவியாளர் கொண்டு வந்து அமைச்சர் கைகளில் கொடுத்தார். ஏற்கனவே பசியிலும், தூக்கத்திலும் இருந்த நான், அருகில் அமர்ந்திருந்த பேராசிரியரின் தோள்களில் சாய்ந்தேன். தாயுள்ளத்துடன் என் தலையைத் தடவிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார் பேராசிரியர். அமைச்சருக்கு அடுத்து பேச வந்த பாராளுமன்ற உறுப்பினர் திருமதி வனரோஜா, ’அன்பான வாக்காளப் பெருமக்களே’ என்று தொடங்கி சுவைபடப் பேசினார். பின் இளையராஜா அவர்களை வணங்கிவிட்டு, எல்லோரும் மேடையைவிட்டு இறங்கிச் சென்றனர்.
மீண்டும் நனைந்த ஜிப்பாவுடன் கவிஞர் சொற்கோ வெண்பாவைப் பற்றிப் பேச வந்தபோது, மணி மதியம் இரண்டை நெருங்கியிருந்தது. இப்போது மேடையிலும், கீழேயும் அமர்ந்திருந்த அனைவரின் உடைகளும் நனைந்திருந்தன. அத்தனை பசியிலும், களைப்பிலும் கவிஞர் சொற்கோ உறுமினார். அறைக்குச் சென்று நிச்சயம் இருமியிருப்பார். சொற்கோவின் உடல்நலனில் அக்கறை கொண்ட கவிஞர் முத்துலிங்கம் அவரை அமரச் செய்து, அடுத்து மு.மேத்தாவைப் பேச அழைத்தார். இளையராஜா அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களைப் பற்றிப் பேசிவிட்டு கவிஞர் மு.மேத்தா அமர்ந்தபோது, களைப்பு அவர் முகத்தில் தெரிந்தது. அடுத்து புலவர் கோ.சாரங்கபாணி வந்து பாடினார். தன்னை தினமும் காலையில் இளையராஜா அவர்களின் பாடலொன்றுதான் தூக்கத்திலிருந்து எழுப்பி விடுகிறது என்று சொல்லி, முழுப்பாடலையும் பாடினார். அவர் பாடிய அந்தப் பாடல், புதுவை அரவிந்தர் அன்னையைப் பற்றி கங்கை அமரன் அவர்கள் இயற்றி, இசைத்து, பாடிய பாடல். இப்படியாக அவர் ஒரே பாடலின் மூலம் இளையராஜா அவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
மதிய உணவு நேரம் எப்போதோ கடந்து விட்டிருந்தது. ஆனாலும் கூடியிருந்த மக்கள் அனைவரும் இளையராஜா அவர்களின் ஏற்புரைக்காக பொறுமையாக அமர்ந்திருந்தார்கள். இந்த நேரத்தில்தான் தோழர் ஸ்டாலின் குணசேகரன் பேச வந்தார். வருடந்தோறும் ஈரோட்டில் சிறப்பான முறையில் புத்தகக் கண்காட்சி நடத்துகிற செயல்வீரர், அவர். மக்களோடு மக்களாக தொடர்ந்து உரையாடிக்கொண்டிருக்கிற தோழர் ஸ்டாலின் குணசேகரன் பேசத் துவங்கிய ஐந்து நிமிடங்களிலேயே கூட்டத்தை தன்வசப்படுத்தினார். இன்னும் சிறிதுநேரம் பேசமாட்டாரா என்று எதிர்பார்க்க வைத்த பேச்சு. ஏற்புரையை இளையராஜா அவர்கள் மிகச் சுருக்கமாக முடித்துக் கொள்ள, கொளுத்தும் வெயிலில் அவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், கொதிக்கும் கல்தரையில் ஓட்டமும், நடையுமாக அவரைப் பின் தொடர்ந்து ரமணாசிரமம் சென்றோம். மதிய உணவு, சாயங்கால பூஜை, எனது அடுத்த படம் பற்றிய அலோசனைகள் போன்றவற்றை முடித்துவிட்டு ரமணாசிரமத்தை விட்டுக் கிளம்பும் போது, வானம் இருட்டத் தொடங்கியிருந்தது.
‘என்னைச் சந்திக்காமல் போகக் கூடாது’ என்று அன்புக்கட்டளை இட்டிருந்த நண்பர் எஸ்.கே.பி.கருணாவை அவரது கல்லூரி வளாகத்தில் அமைந்திருந்த விருந்தினர் மாளிகையில் சந்திக்கச் சென்றோம். வெளியே மழை கொட்டிக் கொண்டிருக்க, அடுத்தடுத்து இரண்டு முறை தேநீர் வழங்கி, சுவையாகப் பேசிக்கொண்டிருந்தார், கருணா. கருணாவின் கலாரசனையை ஏற்கனவே அவரது எழுத்து மூலம் நானறிவேன். உடன் வந்த டாக்டர் ஆல்பர்ட்டும், தேனி கண்ணனும் அந்த முதல் சந்திப்பிலேயே கருணாவின் ரசிகர்களானார்கள். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தனது விருந்தினர் மாளிகையைச் சுற்றிக் காண்பித்த நண்பர் கருணா, ‘இனிமேல் திருவண்ணாமலைக்கு நீங்க வர்றதா இருந்தா, எனக்கொரு ஃபோன் பண்ணிட்டு நேரே இங்கே வந்திரணும். வேற எங்கேயும் தங்கக் கூடாது’ என்றார். மழை நின்றபாடில்லை. ‘ஒண்ணும் பிரச்சனையில்ல. டின்னர் ரெடி பண்ணச் சொல்றேன். சாப்பிட்டுட்டு, நைட் தங்கிட்டு காலைல கூட நீங்க போகலாம்’ என்றார், கருணா. டாக்டரைப் பார்த்தேன். ‘பரவாயில்லண்ணே. கெளம்பிடலாம். போற வழில சாப்டுக்குவோம்’ என்றார் டாக்டர் ஆல்பர்ட். கருணாவிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினோம்.
மீண்டும் வீடியோ கேம் கார். ’இனிமேல் ராஜாஸார இந்த மாதிரி நிகழ்ச்சிலல்லாம் கலந்துக்கக்கூடாது, ஆல்பர்ட்’ என்றேன். ‘கரெக்டுண்ணே. நீங்கதான் அவர்கிட்ட சொல்லணும்’ என்றபடி ஸ்டியரிங்கை ஒரு சுற்று சுற்றி, இந்தமுறை கார் டயர்களினால் ரோட்டில் ‘ஞ’ எழுதிக் காண்பித்தார். பின்னணியில் கேட்டுக் கொண்டிருந்த ’அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம்’ என்கிற ‘ஜப்பானில் கல்யாணராமன்’ பாடலையும் மீறி ஒலித்தது, இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்த சீட்பெல்டுக்குள் இருந்த தேனி கண்ணனின் கந்தரலங்காரம்.
புகைப்படங்கள்: நன்றி ’முரளிதர் வி.எஸ்’.
Labels: இளையராஜா, எஸ்.கேபி.கருணா, திருவண்ணாமலை, ரமணாசிரமம்